தேவையற்ற நச்சு உணவுகள் நமது நலவாழ்வை பாதித்து உடலில் பல இடையூறுகளை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் பண்டைய மருத்துவ அறிவியல், உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி மற்றும் உடல் சிகிச்சை மூலம் உடலை சுத்தப்படுத்தவும், உடல், மனம் மற்றும் உணர்ச்சி சமநிலையை மீட்டெடுக்க ஆயுர்வேதம் பெரிதும் உதவுகிறது. உடல், மனம் மற்றும் ஆன்மாவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே நோய்கள் ஏற்பட காரணம் என்கிறது ஆயுர்வேதம்.
இயற்கையான வாழ்க்கை முறை மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் மூலம் பல சுகாதார நிலைமைகளை இயற்கையாகவே குணப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள். இயற்கை சிகிச்சை மருத்துவமனையான Zyropathy-ன் நிறுவனர் காமயானி நரேஷ் பேசுகையில், ஆயுர்வேதத்தின் பாரம்பரிய முறைகளுடன் இணைந்த இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் ஆரோக்கிய பழக்கவழக்கங்கள் பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதாக குறிப்பிட்டார். ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும் 3 சக்திவாய்ந்த ஆயுர்வேத மூலிகைகளை நரேஷ் ஷேர் செய்துள்ளார்.
திரிபலா : பாரம்பரிய மருந்துகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த திரிபலா. அற்புத மூலிகைகளான கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் உள்ளிட்ட மூன்றின் கலவையே இந்த திரிபலா. ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, தொடர் காய்ச்சல், மலச்சிக்கல் மற்றும் பிற இரைப்பைக் கோளாறுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வாக திரிபலா பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இதில் டானின்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் ஏராளம். இது ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியா குணங்களைக் கொண்டுள்ளது. உடலின் செல்களில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்ஸை நீக்குகிறது. வெளியிலிருந்து வரும் கிருமிகளை அழிப்பதற்கான ஆன்டிபாடிகளை செயல்படுத்த தேவையான உடல் திறனை அதிகரிக்கிறது. திரிபலா பவுடரை வெந்நீரில் சேர்த்து குடிக்கலாம். இல்லை என்றால் தேனுடன், திரிபலா மற்றும் அதிமதுரம் கலந்தும் எடுக்கலாம்.
அஷ்வகந்தா : அஷ்வகந்தாவின் ஆன்டிஆக்ஸின்ட் பண்புகள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அகற்றவும், செல் சிதைவை தடுக்கவும் உதவுகிறது. இது உயிரணு செயல்பாட்டை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்கிறது. நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு தன்மையை அஷ்வகந்தா பலப்படுத்துகிறது. தவிர அஷ்வகந்தா பாலுணர்வை உண்டாக்கும் அல்லது பாலியல் ஆசை, இன்பம் அல்லது செயல்திறனை மேம்படுத்த உதவும் மூலிகையாக குறிப்பிடப்படுகிறது. குறைவான லிபிடோ அல்லது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. ஒரு அரை கிளாஸ் பால் மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்த்து அஷ்வகந்தாவை சாப்பிடுவது மிகவும் பயனுள்ள முறையாகும்.
சீந்தில் : இம்யூனோமோடூலேட்டரி குணாதிசயங்களை பெற்றிருப்பதால் சீந்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மஞ்சள் காமாலை, ஃபேட்டி லிவர்மற்றும் புழு தொல்லைகள் போன்ற வயிறு மற்றும் குடல் நோய்களுக்கு எதிராக உடலை பலப்படுத்துகிறது. சீந்தில் தொடர்ந்து எடுப்பது சுவாச நோய்களைத் தடுக்கிறது. கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை வலுவாக வைக்க சீந்தில் சாற்றை தினமும் காலை நேரத்தில் தண்ணீருடன் சேர்த்து பருகலாம்.
இதற்கிடையே நானோசெல்பதி போன்ற வளர்ந்து வரும் ஆயுர்வேத தொழில்நுட்பங்கள் பற்றி பேசிய நிபுணர் காமயானி நரேஷ், ஆயுர்வேத நானோசெல்லோபதி பாரம்பரிய அறிவின் செயல்திறனை இயற்கையின் குணப்படுத்தும் சக்தியுடன் ஒருங்கிணைக்கிறது. ஆயுர்வேத நானோசெல்லோபதி மூலம் பல நோய்களுக்கான மேற்பூச்சு ஆயுர்வேத வைத்தியம் (topical Ayurvedic remedies) உருவாக்கப்பட்டுள்ளது. இது மருந்துகள் மற்றும் மூலிகைகள் உட்கொள்ளும் தேவையை கணிசமாக குறைப்பதாக கூறியுள்ளார்.