பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்றாலே பல விதங்களில் அசௌகரியமாகத்தான் இருக்கும். உணவு பழக்கம் மாற வேண்டும், வேலைகளை சமாளிக்க வேண்டும், ஒரு சிலருக்கு தீவிரமான வயிற்று வலியுடன் கூடிய மாதவிடாய் நாட்கள், மன அழுத்தம் என்று மாதவிடாய் என்றாலே அவஸ்தையாக காணப்படும். இந்த நிலையில், மாதவிடாய் நேரத்தில் யோகா பயிற்சி செய்யலாமா, அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாமா என்பது நீண்ட நாட்களாக விவாதத்தில் இருக்கிறது.
ஒரு சிலர் மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், சிலர் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தீவிரமாக எந்த வேலையும் செய்யக்கூடாது, இது உதிரப் போக்கு, வயிற்று வலி, மற்றும் உடல் அசதியை அதிகப்படுத்தும் என்றும், ஆனால் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களில் எல்லா வேலைகளையும் செய்யலாம் அப்போதுதான் மாதவிடாய் நாட்களை அதிக வலி மற்றும் அவஸ்தை இல்லாமல் எதிர்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார்கள்.சரி உண்மையிலேயே மாதவிடாய் நாட்களில் யோகா செய்தால் நன்மைகளா அல்லது யோகா செய்வதால் பிரச்சனை ஏற்படுமா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் என்பது ஒரே மாதிரியான அனுபவமாக இருக்காது.பல பெண்களுக்கு தீவிரமான வலி, மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள், உடல் சோர்வு, மன சோர்வு, வயிறு உப்பசம், எரிச்சலான மனநிலை ஆகியவை ஏற்படும். ஒரு சிலருக்கு அதிகமாக உதிரப் போக்கு ஏற்படுவதால் அவர்கள் உடல் பலவீனமாக இருக்கும். ஓய்வு எடுக்க வேண்டும் என்று பல பெண்களுக்கும் தோன்றும்.எனவே ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் சுழற்சியின் போது தன் உடலில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படுகிறது, எவ்வாறு எதுவெல்லாம் பாதிப்பாக இருக்கிறது, எவையெல்லாம் மாதவிடாய் நாட்களை எளிதாக கடந்து செல்ல உதவுகிறது என்பதைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், எமோஷனல் ஹெல்த் என்று கூறப்படும் மனம் மற்றும் உணர்ச்சி பூர்வமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.மாதவிடாய் நாட்களில் பல விதங்களில் அவஸ்தைப்படும் பெண்களுக்கு, யோகா பயிற்சி என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனதளவிலும், உணர்ச்சிபூர்வமாகவும் அவர்களை அமைதிப்படுத்தும் அளவிற்கு உதவியாக இருக்கும்.
பாட்ஸ்பியர் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான ப்ரீதிகா பட்நாகர், ‘மாதவிடாய் காலத்தில் யோகா பயிற்சி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அறிகுறிகள் மற்றும் பிரச்சனைகள் தான். யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்ற யோசனை கூட, தீவிரமான மாதவிடாய் பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கு எதிர்மறையாகத்தான் தோன்றும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், யோகா பயிற்சி என்பது கடினமான ஆசனங்களை பயிற்சி செய்வது என்பது மட்டுமல்ல. மிகவும் எளிதாக செய்யக்கூடிய பிரானாயாமா என்ற மூச்சுப் பயிற்சி, மாற்றி மாற்றி இரு நாசிகளில் மூச்சு விடும் பயிற்சி, ஆழமான மூச்சு இழுத்து விடும் பயிற்சி ஆகியவையே நிம்மதியாகவும், அமைதியாகவும் உணரச்செய்யும். அது மட்டுமில்லாமல், மன அழுத்தம், எரிச்சல், மூட் ஸ்விங்க்ஸ், கோபம் ஆகியவையும் சீராகும். அதே போல, மென்மையான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்வதன் மூலமாக இடுப்பு வலி குறையும்.