சாப்பிட்ட உடனே படுத்து தூங்கக் கூடாது என்ற வார்த்தையை வீட்டில் பெரியவர்கள் சொல்லி, சொல்லி நம்மை வளர்த்திருப்பார்கள். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது என்பது சரி, ஆனால், வேறென்ன செய்வது? பொடிநடையாக நடந்து செல்லலாமா? அது உடல்நலனுக்கு நல்லதா? இதுகுறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
வேக நடை கூடாது: சாப்பிட்ட பிறகு நடை போடலாம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு வேகமாக நடைபோடுவது ஆபத்தானது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. அதே சமயம் மதியம் அல்லது இரவு உணவுக்குப் பிறகு பொடி நடையாக 100 தடங்கள் அளவுக்கு சென்று வருவது ஆரோக்கியமானதாம். இந்த நடை எந்த அளவுக்கு மெதுவாக அமைய வேண்டும் என்றால் 100 கால்தட அளவை கடந்து செல்ல 15 நிமிடங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
செரிமானத்திற்கு உதவுகிறது: நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுவதற்கு பல்வேறு கேஸ்ட்ரிக் ஜூஸ் மற்றும் என்ஜைம்கள் உதவியாக அமைகின்றன. சாப்பிட்ட உடன் நடப்பதால் இந்த கேஸ்ட்ரிக் அமிலத்தின் சுரப்பு வேகமெடுக்கிறதாம். ஆகவே அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கிறது. வயிறு உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை போன்றவற்றில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.
சோம்பலை முறிக்கிறது: நாம் சாப்பிட்ட பிறகு லேசாக உடல் அசதியாக இருக்கும். உடனடியாக சாய்ந்து ஒரு 10 நிமிடமாவது தூங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எடுத்துக் கொண்டதன் விளைவாக நம் உடலில் செரோடோனின் உற்பத்தி அதிகரிக்கும். இதன் காரணமாக நமக்கு அசதி ஏற்பட்டு தூக்கம் வரலாம். சில தொலைவுக்கு பொடி நடையாக சென்று வந்தால் இந்த அசதி களைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.