இன்றைக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பலரும் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். மிகவும் ஃபிட்டாக இருக்கும் நபர் கூட அலுவலகத்தில் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அலுவலகத்தில் வேலை பார்க்கும் பலரும் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கும் காரணத்தினால் அவர்களது உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகின்றன.
உண்மையிலேயே அலுவலகம் செல்பவர்கள் மட்டுமின்றி, பலரும் ஒரு நாளில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே தான் செலவழிக்கிறார்கள். இதன் காரணமாக முதுகு தண்டு பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் தோரணையில் மாற்றம் போன்ற பல்வேறு விதமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரு தீர்வாக தான் அலுவலகத்தில் ஸ்டாண்டிங் டெஸ்க் என அழைக்கப்படும் நிற்கும் மேசைகள் தற்போது அமைக்கப்படுகின்றன.
சரியான உடல் தோரணை : சிலருக்கு நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து கொண்டே இருப்பதால் உடல் தோரணையில் மாற்றம் உண்டாகலாம். இதனால் நரம்பியல் பிரச்சனைகள், முதுகு வலி, முதுகு தண்டு பிரச்சனைகள், மூட்டு இணைப்புகளில் பாதிப்புகள், வளைந்த தோல்பட்டைகள் போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் உண்டாகின்றன. நீங்கள் இந்த நிற்கும் மேசையில் அவ்வப்போது நின்று கொண்டு வேலை செய்யும்போது அவை கால்கள் மற்றும் மூட்டுகளில் உள்ள தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நாளடைவில் உங்கள் உடல் தோரணையும் முன்னேறுவதை நீங்கள் பார்க்க முடியும்.
உடல் சக்தி அதிகரிக்கிறது : உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் அடிக்கடி உடல் சோர்வடைந்து தூங்கும் மனநிலைக்கு வந்து விடுகிறோம். எனவே இந்த நிற்கும் மேசைகளில் அடிக்கடி வேலை செய்யும்போது அவை உடல் இயக்கத்தை அதிகப்படுத்துவதோடு உடல் முழுவதும் ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக உங்களது சக்தி அதிகரிப்பதோடு செயல் திறனும் அதிகரிக்கிறது.
இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு : நிற்கும் மேசைகளில் அடிக்கடி நின்று கொண்டு வேலை செய்பவர்கள் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் நீரிழிவு நோய், வெரிகோஸ் வெயின் மற்றும் சில வகையான புற்றுநோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்.
உடல் எடை குறைதல் : நாம் செலவழிக்கும் சக்தியை விட அதிகம் கலோரிகளை உட்கொள்ளும் போது உடல் எடை கூடுகிறது. பலர் எந்த விதமான உடல் இயக்கமும் இல்லாமல் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் உடல் எடை கூடுவதை உணர துவங்கியுள்ளனர். உடல் எடை குறைக்கும் பல்வேறு உடற்பயிற்சிகள் இருந்தாலும் இந்த நிற்கும் மேசையில் அவ்வப்போது நின்று கொண்டு வேலை செய்வதே அதிக கலோரிகளை குறைக்கிறது. கிட்டத்தட்ட உட்கார்ந்து வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 139 கலோரி குறைவதாகவும், இதுவே நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு 186 கலோரி குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.