மன அழுத்தம் என்பது மனிதர்களாகிய அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். ஒரு மனிதன் மிகவும் பதற்றமாகவும், கவலையுடனும் உணர்ந்தால் அவருக்கு தியானம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு சிறிது நேரம் செய்யக்கூடிய தியானம் கூட மனதை கட்டுப்படுத்தவும், மனஅமைதியை பெறவும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். தியானத்தை மிகவும் எளிதான முறையில் நாம் செய்யலாம். அதற்காக பிரத்யேக பொருட்கள் எதுவும் தேவையில்லை. மன அழுத்தத்தாலோ, முன்கோபத்தாலோ நாம் துவண்டு போனால், நாம் நமக்கு உதவும் வகையில் தியானம் போன்ற வழிகளை நாடுகிறோம்.
தியானம் உணர்வுகளின் குறைபாடுகளைக் கடந்து வர மிகவும் உதவுகிறது, இதில் எதிர்மறை பக்கவிளைவுகள் எதுவுமில்லை. தியானத்தை நாம் யதார்த்தமான அணுகுமுறையோடு அணுகவேண்டும். இது எல்லாவற்றிற்குமான உடனடித் தீர்வல்ல, எனினும் தியானத்தை நேர்மறை முடிவுகளைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தலாம். இருப்பினும், புதியவர்களுக்கு தியானத்தை தொடங்குவது சற்று கடினமாக இருக்கலாம். நீங்கள் தியானத்தை புதிதாக தொடங்குகிறீர்கள் என்றால் அதை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும் அதன் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
தியானம் செய்ய அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்யவும் : தியானத்தை புதிதாக செய்ய விரும்புகிறவர்கள் ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. அதாவது தொலைக்காட்சி, ரேடியோக்கள் அல்லது செல்போன்கள் உட்பட சில கவனச்சிதறல்கள் இல்லாமல் நீங்கள் அமைதியான இடத்தில் இருந்து தியானம் செய்வது தியானத்தை எளிதாக மேற்கொள்ள வழிவகுக்கும். நல்ல காற்றோட்டமான செடி கொடி தாவரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களையும் தேர்வு செய்யலாம். அவ்வாறு ஒரு நல்ல அறையைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் உடலையும் மனதையும் எளிதாக உணர வைக்கவும், தியானத்திற்கு நம்மை தயார் படுத்துவதை எளிதாக்கவும் உதவும். தியானத்திற்காக ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குவதும் அதை பராமரிப்பதும் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர உதவும்.
வசதியாக அமர்ந்து தியானம் செய்தல்: தியானம் செய்யும் போது வசதியாக இருக்க முயற்சி செய்யுங்கள், இதனால் உங்கள் தியானத்தில் இருந்து அதிக பலனை பெற முடியும். தியானத்தின் போது கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் நபர்களின் ஒரே மாதிரியான கருத்துக்களை மறந்து விடுங்கள். பெரும்பாலான மக்கள் அந்த நிலையை கவனத்தை சிதறடிக்கும் நிலை எனவும், அவ்வாறு செய்வது அசவுகரியமாக கருதுகின்றனர். உங்களுக்கு மிகவும் வசதியான தியான நிலையை கண்டறிவதே மிக முக்கியமான விஷயம்.
சாதாரணமாக மூச்சுவிடுதல்: உங்கள் மூக்கின் வழியாக நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போதும், வெளியேற்றும் போதும் உங்கள் மூச்சு காற்றை உணர்ந்து கேட்பதில் கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிக்கவும். உங்கள் கவனம் திசைதிருப்பும்போது, உங்கள் சுவாசத்தின் மேல் கவனத்தை மெல்ல திருப்புங்கள். உங்கள் சுவாசத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கவோ, மாற்றவோ முயற்சிக்காதீர்கள். அது இயற்கையாக நடப்பது போல் நடக்கட்டும்.
சவுகரியமான ஆடைகளை அணிவது: தியானத்தின் போது ஒரே நிலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். அந்த நேரத்தில் நாம் அணிந்துள்ள ஆடைகள் சவுகரியமாக இல்லை என்றால், கவனச்சிதறல்கள் ஏற்படலாம். அதை தவிர்க்க மிகவும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கலாம். மிகவும் தளர்வான மெல்லிய ஆடைகளை அணியலாம். சீதோஷன நிலைக்கு ஏற்றவாறு ஆடையை அணியலாம்.
மனதை ரிலாக்ஸ் செய்துவிட்டு தொடங்குதல்: தியானத்தை தொடங்கும் முன் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு தொடங்கினால், உங்கள் கவனத்தைத் திசை திருப்பாமல் தக்கவைத்து கொள்ளலாம். பல அழுத்தமான சூழ்நிலைகளுக்குப் பிறகு, அமைதியாக இருப்பது மற்றும் உங்கள் மனதை தெளிவுபடுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, ரிலாக்ஸ் செய்துவிட்டு தியானம் தொடங்குவது நல்ல பலனை தரும்.