பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். பட்டாசு மற்றும் புத்தாடை வாங்குவதில் மக்கள் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் வீடுகள் மற்றும் ஸ்வீட் கடைகளில் விதவிதமான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு சுவைமிக்க பொருட்கள் நிறைந்த பெரிய விருந்துக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வயிறு கோளாறு, செரிமான பிரச்சனைகள், ரத்த சர்க்கரை அளவு அல்லது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உடலை தயார் செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல வீடுகளில் தீபாவளி மருந்து என்ற பெயரில் இதற்கான மூலிகை பொருள் தயார் செய்தாலும், சில வீடுகளில் தீபாவளி பலகாரங்களை சாப்பிடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவர்.
அதன் பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பார்கள். தீபாவளி நெருங்கும் நிலையில் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் நச்சுக்களை அகற்றுவது இன்றியமையாதது. தீபாவளிக்கு முன்னதாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்த சில ஆயுர்வேத டிப்ஸ்கள் உதவுகின்றன.
தற்போது பல இடங்களில் குளிர்ச்சியாக காணப்பட்டாலும் ஆயுர்வேதத்தின் படி, இலையுதிர்காலத்தில் (கோடைக்காலத்திற்கும் கடுங்குளிர்காலத்திற்கும் இடைப்பட்ட பருவம்) நம் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. எனவே தீபாவளிக்கு முன்பு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற நெல்லிக்காயை எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. காலை நேரத்தில் நெல்லிக்காய் எடுத்து கொள்வது குடலை எளிதாக சுத்தம் செய்ய உதவும்.
இதிலிருக்கும் வைட்டமின் சி உள்ளடக்கம் உடலை சுத்திகரிக்க உதவுகிறது. நெல்லிக்காய் சட்னி அலல்து தேன் நெல்லிக்காய் உள்ளிட்டவையும் எடுத்து கொள்ளலாம். நெல்லிக்காயை பலர் உப்புடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவதால் நெல்லிக்காயின் பலன் நமக்கு கிடைக்காது என்று குறிப்பிடுகிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள். அதே போல நெல்லிக்காயை ஊறுகாயாகவும், சட்னியாகவும் செய்யும் போது அதில் நிறைய மசாலா மற்றும் உப்பு சேர்த்தால் அதுவும் பலன் தராது என்கிறார்கள்.
வெந்நீர் : உப்பு மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்க்க முடியாமல் அதிக சாப்பிட்டு விட்டால் உங்கள் உடலில் இருந்து அவற்றை வெளியேற்ற ஒரு வழி இருக்கிறது. அதிகம் தண்ணீர் குடிப்பது தான் அது, அதிலும் நாள் முழுவதும் வெந்நீர் குடிப்பது சிறந்த வழி. இது போக நல்ல குடல் இயக்கத்திற்கு திரிபலா சூரணம் அல்லது நெல்லிக்காய் சாறு சாப்பிடலாம்.