பற்களை சுத்தமாக பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அதை முறையாக செய்தோமேயானால் எதிர்காலப் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பல் போனால் சொல் போச்சு என்னும் பழமொழிக்கு ஏற்ப பற்களின் ஆரோக்கியத்தை நாம் இழந்தால் உடலுக்கு தேவையான அடிப்படை உணவுகளைக் கூட சாப்பிட இயலாமல் போகும். இதனால் போதுமான ஊட்டச்சத்துக்களையும் இழக்க நேரிடும். எனவே பற்களின் ஆரோக்கியத்தில் எப்படி கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நாம் தினமும் என்ன செய்ய வேண்டும் என ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சார் சில டிப்ஸுகளை அளிக்கிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.
எண்ணெயில் வாய் கொப்பளித்தல் : . Oil pulling என்று சொல்லக்கூடிய இந்த முறையில் பாக்டீரியாக்கள் , உணவுத் துகள்கள் பற்களில், வாயின் ஓரங்களில் அடைத்திருந்தால் வெளியேறும் என்கிறார். குறிப்பாக வாய் புண் வராது. அதோடு வாயை நன்கு கொப்பளிக்கும்போது அது வாயின் தசைகளுக்கு உடற்பயிற்சியாக இருக்கும். இதனால் அவை இன்னும் உறுதியாகும். இதற்கு வாய் கொப்பளிக்க கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். குறைந்தது 15- 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
வேம்பு குச்சி பயன்படுத்துதல் : ஆயுர்வேத முறைப்படி வேம்பு குச்சிகளை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்வதால் பற்களின் ஈறுகள் உறுதியடைகின்றன. பற்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்பு வேப்பிலையில் இருக்கிறது. எனவே வேம்பு குச்சிகளை நன்கு மென்று அதை பயன்படுத்தி பற்கள், ஈறுகள், கடவாய் பல் என மூலை முடுக்குகளில் நன்கு தேய்க்க வாய் சுத்தமாகும். துர்நாற்றமும் இருக்காது.
நாக்கை சுத்தம் செய்தல் : இந்த முறையை பலரும் செய்யத் தவறுகின்றனர். பற்களை சுத்தம் செய்யும்போதே நாவையும் சுத்தம் செய்தல் அவசியம். நாவில் தேங்கும் உணவுத் துகள்களும் பாக்டீரியாக்களை உருவாக்கும். அதோடு தேங்கும் துகள்கள் நாவின் சுவை மொட்டுகளை அடைத்துவிடும். இதனால் உணவின் ருசியை முழுமையாக அனுபவிக்க முடியாது. எனவே நாக்கின் அழுக்கை எடுக்க பயன்படுத்தப்படும் ஸ்டிக்கை கொண்டு அழுக்குகளை வழித்து எடுப்பதே இந்த முறையாகும்.
வாயை சுத்தம் செய்தக் : மூலிகைகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வாய் சுத்தம் செய்யும் திரவங்களைக் கொண்டு வாயை கொப்பளிப்பது வாய் துர்நாற்றம், வாய்ப்புண், உணவுத் துகள் தேக்கங்களை தவிர்க்க உதசும். இதை ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும். சாக்லெட், ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட்டால் கூட செய்ய வேண்டும். வாய் சுத்தம் செய்யும் திரவத்தை வீட்டிலேயே செய்யவும் தீக்ஷா டிப்ஸ் தருகிறார்.
அதாவது திரிபாலாவை இடித்து ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதி அளவாக குறையும் வரை கொதிக்க விட்டு பின் வடிகட்ட வேண்டும். அதை ஆறியதும் ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் அதை தேவைப்படும்போது வாயில் ஊற்றி கொப்பளியுங்கள். வெதுவெதுப்பான நீராக இருக்கும் போது கொப்பளித்தால் கூடுதல் நல்லது.
இரண்டு முறை பல் துலக்குதல் : சாப்ப்பிட்ட உடனேயே பற்களை துலக்குதல் அவசியம் என்கிறார். அப்படி ஒரு நாளைக்கு 4-5 முறை பல் துலக்க நேரிடும். இருப்பினும் வெளியில் செல்வோருக்கு இது சாத்தியம் இல்லை என்பதால் காலை மற்றும் இரவு என இரண்டு வேளைகள் பல் துலக்க பரிந்துரைக்கிறார். இவ்வாறு செய்வதால் பாக்டீரியா தேக்கம், உணவுத் துகள் தேக்கத்தை தவிர்க்கலாம்.