ஆன்டிபயாட்டிக்ஸ் உதவுமா: சிறுநீர் பாதை தொற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுவாக ஆன்டிபயாட்டிக்ஸ் எடுத்துக் கொண்டால் 5 நாட்களில் நோய் குணமாகும். அதுவே ஆண்கள் என்றால் மருந்துகள் நீண்ட காலத்திற்கு தேவைப்படலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பாக்டீரியாவை தாக்கி அழிக்கும். பொதுவாக சிக்கல் அல்லாத தொற்று மற்றும் சிக்கல் நிறைந்த தொற்று என்று இரண்டு வகை இதில் இருக்கிறது. இதில் சிக்கல் நிறைந்த தொற்று வகைக்கு மிகுந்த கவனம் தேவை.
வீட்டு முறை சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது: சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் சிறந்த தீர்வாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேசமயம் உங்களுக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்பு லேசான அளவில் இருக்கும்போதே மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. மருத்துவரை ஆலோசனை செய்து வீட்டிலேயே இதற்கான எளிய தீர்வுகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
அதிக தண்ணீர் அருந்த வேண்டும் : நம் உடலில் பலவகை பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடியது தண்ணீர் ஆகும். குறிப்பாக சிறுநீர் பாதை தொற்றுக்கு இது நல்ல தீர்வை தரும். நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதால் இந்த தொற்று வராமல் தடுக்கும் மற்றும் வந்தவர்களுக்கு பாக்டீரியாவை வெளியேற்ற உதவும். அதிக தண்ணீர் குடித்து அதிகமான சிறுநீர் வேகமாக வெளியேறும் போது அதில் பாக்டீரியா அடித்துச் செல்லப்படும்.
கிரேன்பெர்ரி பழங்கள்: கிரேன்பெர்ரி பழங்கள் சிறுநீர் பாதை தொற்று நோயை குணமாக்கும் என்று உறுதியான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, இந்த நோய் பாதிப்புக்கான அபாயத்தை இதை வெகுவாக தடுக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக உங்கள் சிறுநீர் பாதையில் பாக்டீரியா ஒட்டிக் கொள்வதை இது தடுக்கிறது.
ப்ரோபயாடிக்ஸ் அவசியம் : நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்கவும், செரிமான சக்தியை மேம்படுத்தவும் நுண்ணுயிர்கள் நிறைந்த ப்ரோபயாடிக்ஸ் அவசியமாகும். இது உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கும். ஆகவே சிறுநீர் பாதை தொற்று வராமல் தடுக்கும். மேலும் நல்ல நிவாரணம் தரும்.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்: பெரும்பாலும் சிட்ரிக் பழங்கள் எனப்படும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழவகை அனைத்திலும் வைட்டமின் சி சத்து நிறைவாக உள்ளது. அதேபோல முட்டைக்கோசு, வாழைப்பழம் போன்றவற்றிலும் வைட்டமின் சி சத்து இருக்கிறது. இந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வதால் நமது சிறுநீரில் ஆசிட் அளவு அதிகரித்து, தேக்கம் அடையும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது.