பொதுவாக கர்ப்பமான பெண்களிடம் இதை செய்ய கூடாது, அதை செய்ய கூடாது, இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிட கூடாது என்பன போன்ற பல விஷயங்களை கூறுவார்கள். ஆனால், இவற்றில் முக்கால்வாசி விஷயங்கள் யாரோ பல ஆண்டு காலமாக சொல்லி வந்தவகையாகவே இருக்கும். அதுவும் இவற்றில் பல போலியான செய்திகளும் இருக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் எதை சாப்பிடுவது, எதை சாப்பிட கூடாது என்கிற குழப்பம் பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது.
தவறான உணவை சாப்பிட்டு விட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு அதனால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம் பல பெண்களுக்கு இருந்து வருகிறது. இதில் குறிப்பாக பழங்களை சாப்பிடும்போது நிறைய சந்தேங்கங்கள் வரும். பப்பாளி, பலா போன்ற பழங்களை கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது என்று சொல்லி வருவார்கள். அதே போன்று அதிக சத்துக்கள் கொண்ட அவகேடோ பழத்தை சாப்பிடலாமா வேண்டாமா என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. இந்த பதிவில் இது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
அவகேடோ பழங்கள் : இதில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. ஆய்வுகளின்படி கருப்பையின் புறணியை மேம்படுத்துவதில் அவகேடோ பழம் உதவுவதாக கூறப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் ஆன ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, இது உடலின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் மருத்துவ ரீதியாக கருவுறுதல் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு நேர்மறையான விளைவுகளை தருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
அவகேடோ பழத்தில் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் உள்ளது. இது பிறவி குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இத்துடன் இதிலுள்ள ஜிங்க் விந்தணுக்களைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்கிறது. அவகேடோவில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே கருவுறுதலுக்கு இது பெரிதும் உதவுகிறது. கருவுறுதல் மட்டுமல்லாமல், இந்த பழமானது ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்ப பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க அவகேடோ உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர, அவகேடோ பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது, இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், அவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வயது அதிகரிக்கும்போது ஏற்படும் தோல் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
பொட்டாசியம் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், அவகேடோ பழமானது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற அபாயத்தை கணிசமாகக் குறைக்கவும் செய்கிறது. மேலும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், அவகேடோ பழத்தில் உள்ள நிறைவுறா கொழுப்புகள் அறிவாற்றல் குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதனால் வயதானவர்கள் அவகேடோவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இத்தகைய பல நன்மைகள் கொண்ட அவகேடோ பழத்தை கர்ப்பிணிகளும் உண்ணலாம்.