பொதுவாக ஆல்கஹால் நம் உடலுக்கு எவ்வளவு மோசமான தீமைகளை ஏற்படுத்துகிறது தெரியுமா..? ஒருவரின் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்துகிறது மற்றும் பல உடல்நல கோளாறுகள் ஏற்பட முக்கியாக காரணமாக இருக்கிறது என்பதை பற்றி எல்லாம் நம்மில் பெரும்பாலானோர் ஏற்கனவே அறிந்திருப்போம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது ஆல்கஹால் விஷயத்திற்கும் பொருந்தும்.
எனவே ஆல்கஹாலே கதி என்று கிடக்காமல் குறிப்பிட்ட இடைவெளியில் மிதமாகவோ அல்லது தினசரி பரிந்துரைக்கப்பட்ட குறைவான அளவோஎடுத்து கொள்ளலாம் என்பது பல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மிதமான அளவில் ஆல்கஹாலை குடிப்பது எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.
வோட்கா உள்ளிட்ட ஆல்கஹாலை பரிந்துரைக்கப்பட்ட அளவு குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இங்கே நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய வார்த்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு என்பதாகும். பெண்கள் 1 டிரிங்க் அளவு , ஆண்கள் 2 டிரிங்க் அளவு ஆல்கஹாலை நாளொன்றுக்கு எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இங்கே 1 டிரிங்க் அளவு என்பது பீர் என்றால் 12 அவுன்ஸ் அதாவது 355 மிலி, ஒயின் என்றால் 5 அவுன்ஸ் அதாவது 148 மிலி, மது என்றால் 1.5 அவுன்ஸ் அதாவது 44.3 மிலி அடங்கும். மேற்காணும் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டி நீங்கள் ஆல்கஹால் எடுத்து கொண்டால் அதன் மூலம் கிடைக்க கூடிய நன்மைகள் குறைந்து அபாயங்கள் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீண்ட ஆயுள் : மிதமான ஆல்கஹால் பழக்கம் மூலம் ஒருவரது ஆயுட்காலம் அதிகரிக்கலாம் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. தொடர்ந்து அதிகமாக குடிப்பதை விட, வாரம் முழுவதும் மிதமான அளவில் ஆல்கஹாலை எடுத்து கொள்வது குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 25% இறப்பு அபாயத்தை குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல PLOS மெடிஸின் இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஆய்வில், மதுவை முற்றிலும் தவிர்ப்பவர்களை விட மது அருந்துபவர்கள் இளமையிலேயே இறப்பது குறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதயத்திற்கு நல்லது : குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது கடும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மிதமான குடிப்பழக்கம் இதய செயலிழப்பு அபாயத்தை குறைக்கும். மிதமான குடிப்பழக்கம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மிதமான குடிப்பழக்கம் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளை 25% முதல் 40% வரை குறைக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் : தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான ஆபத்து குறைவு. அதிகப்படியான குடிப்பழக்கம் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உடலை கட்டுக்குள் வைத்திருக்க மிதமாக குடிப்பது முக்கியம்.