ஒருவருக்கு நீரிழிவு நோய் தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது என்பதையும் கூட மருத்துவ பரிசோதனையின் மூலமாக கண்டறிய முடியும். அந்த நிலைக்கு ப்ரீடயபெடீஸ் என்று பெயர். முன்பெல்லாம் ஒருவரது உடல் எடை மிகுதியாக இருப்பின் அவர்களுக்கு நீரிழிவு அபாயம் உண்டாகியிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், உடல் எடையை காட்டிலும் ஒருவரின் வயதைத்தான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில், உடல் எடையை பொருட்படுத்தாமல் 35 முதல் 70 வயது வரை உள்ளவர்களை தேர்வு செய்து நீரிழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து இன மக்களிடையே நீரிழிவு நோய் மற்றும் அதற்கு முந்தைய அபாயத்தை கண்டறிய இந்த ஆய்வு உதவிகரமானதாக இருந்தது என்று ஃபெயின்பெர்க் மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை பெரும் பிரச்சினையல்ல : ஆய்வுக் குழுவின் தலைவர் மேத்தீவ் ஓ பிரையன் இதுகுறித்து கூறுகையில், “முன்பெல்லாம் அதிக உடல் எடையும் இருப்பது மற்றும் உடல் பருமன் ஆகியவை தான் நீரிழிவுக்கான அடிப்படை காரணமாக கருதப்பட்டது. ஆனால், உடல் எடையை மட்டும் கணக்கில் கொண்டால், சில குறிப்பிட்ட இன மக்களின் எடை குறைவாக இருக்கும் என்ற நிலையில், அவர்களுக்கான அபாயத்தை கண்டறிவது சிக்கலானதாக இருக்கும்.
இந்தியாவில் நீரிழிவு : உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 25 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அதே சமயம், இந்தியாவில் நீரிழிவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் பெரிய அளவுக்கு மேற்கொள்ளப்படுவதில்லை.
இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெரியவர்கள் தங்களுக்கான நீரிழிவு நிலை என்ன என்பதே தெரியாமல் இருக்கின்றனர். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறியாமலும், உரிய சிகிச்சை எடுக்காமலும் இருப்பதால் மிகுந்த பாதிப்புகளைஇ எதிர்கொள்கின்றனர். ஆனால், ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் போன்ற பெரும் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் சர்க்கரை நோயை அவ்வளவு அலட்சியமாக கருதாமல், உரிய முறையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.