மாதவிடாய் காலத்தில் பல பெண்களும் எதிர்கொள்ளும் பெரிய சிக்கல், மிதமானது முதல் தீவிரமான வலி. மாதவிடாயின் போது ஏற்படும் வலியைப் போக்க வழியே இல்லையா என்ற பல பெண்களின் கேள்விக்கான பதில், உடற்பயிற்சி செய்வது ஆகும். க்ராம்ப்ஸ் எனப்படும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியது. கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் இந்த வலி ஏற்படுகிறது என்று அறிவியல் பூர்வமாக வலிக்கான காரணம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பையின் லைனிங் சுருங்கி, உடலை விட்டு வெளியே வருகிறது. இது பெண்ணுறுப்பு வழியே உதிரம் வெளியேறுவதற்கு உதவியாக இருக்கிறது. அடிவயிற்றில் பெரும்பாலான பெண்களுக்கு லேசான வலி ஏற்படும்.
ஒரு சிலர் இதனை எளிதாக எதிர்கொண்டாலும், பல பெண்களுக்கு அதிகமான வலி ஏற்படுவது, மாதவிடாய் காலத்தை சிரமமானதாக்குகிறது. வலி மாத்திரை, உணவுகள் மற்றும் ஓய்வு என்று மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக வலியை எதிர்கொள்கின்றனர். இக்காலத்தில் ஏற்படும் வலியை குறைக்க மற்றும் சுலபமாக எதிர்கொள்ள, ஆரோக்கியமான முறைகள் உள்ளன. உடற்பயிற்சி செய்தவே இதற்கான சிறந்த வழியாகும். ஆரோக்கியமான மற்றும் சுலபமான முறையில் மாதவிடாய் காலத்தில் வலியை குறைப்பதற்கான எளிமையான ஐந்து உடற்பயிற்சிகள் இங்கே.
யோகா பயிற்சி : உடல் மட்டுமின்றி, மனதுக்கும் சேர்த்து யோகா பயிற்சி செய்யலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணத்தால், மாதவிடாயின் மனநிலையில் நிமிடத்துக்கொரு முறை மாறுதல் ஏற்படும். இந்நிலையில், யோகா பயிற்சி செய்வது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுவதோடு, மனதையும் அமைதி படுத்துகிறது. உடல் தசைகள் தளர்வடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வலி பெருமளவு குறையும்.