பொதுவாக ஒரு பெண்ணின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே பெண்கள் எப்போதும் தங்கள் உடலுக்குள் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை ஏற்று கொள்ளும் வகையில் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய நோயாக கருதப்படும் புற்றுநோயின் அறிகுறிகளை பெரும்பாலான பெண்கள் புறக்கணிக்கிறார்கள். மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவை பெண்கள் சந்திக்கும் சில பொதுவான புற்றுநோய்களாக இருக்கின்றன.
தொடர்ச்சியான முதுகுவலி : பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கி, மாதவிடாய் நிற்கும் வரை ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஆனால் மாதவிடாய் காலங்கள் தவிர இடுப்பு மற்றும் முதுகுக்கு அருகில் நீண்ட நாட்களாக இருக்கும் வலிகளை அலட்சியம் செய்ய கூடாது. ஏனென்றால் அவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படுவது கணைய புற்றுநோயின் ஒரு அறிகுறி ஆகும்.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை : பெண்கள் சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை பல நேரங்களில் எதிர்கொள்கின்றனர். சிறுநீர் பாதையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றாலும், குறுகிய இடைவெளியில் தொற்று மீண்டும் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். சிறுநீருடன் ரத்தம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும், ஏனென்றால் இது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாகும்.
மார்பக அளவில் மாற்றம் : பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. அக்குள் அல்லது கழுத்து எலும்பில் கட்டி, உள்நோக்கிய முலைக்காம்புகள், முலைக்காம்பிலிருந்து திரவ வெளியேற்றம், மார்பகம் அல்லது முலை காம்பில் வலி, முலை காம்பைச் சுற்றி அரிப்பு உள்ளிட்டவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகள். வழக்கமான சுய பரிசோதனை இந்த அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.