மழைக்காலம் வந்துவிட்டாலே ஜில்லென பொழியும் சாரல் மழையுடன் சேர்த்து காய்ச்சல், ஜலதோஷம், சளி, இருமல், தொண்டை வலி போன்ற தொற்றுக்களும் கிடைக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதம், ஈரமான உடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பெருக காரணமாகிறது. இதனால் ஏராளமான தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அப்படி மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவு பொருட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்...
சீசன் பழங்கள்: ஆப்பிள், ஜாமூன், லிச்சி, பிளம்ஸ், செர்ரி, பீச், பப்பாளி, பேரிக்காய் மற்றும் மாதுளை ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சீசன் மற்றும் அதனால் வரும் நோய்களுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவும். தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சளித்தொந்தரவை உருவாக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
மோர், தயிர்: மழைக்காலத்தில் மோர், தயிர் சாப்பிடுவது நல்லதா என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் பாலை விட தயிர், மோர் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது என பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் மழைக்கால ஈரப்பதம் காரணமாக பாலை சரியாக கொதிக்க வைக்காவிட்டால், பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் தயிர் மற்றும் மோரில் புரோபயாடிக் எனப்படும் பாக்டீரியா உள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது.
கசப்பான உணவுகள்: சுண்டைக்காய், வேப்ப விதைகள், டேன்டேலியன் கீரைகள் மற்றும் மூலிகை தேநீர் போன்ற உணவுகள் நச்சுகளை அகற்றுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இந்த உணவுகளில் கால்சியம் மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய், ஒவ்வாமை ஆகியவற்றை எதிர்த்து போராடத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
வீட்டில் தயாரிக்கப்படும் ஜூஸ்: மழைக்காலத்தில் ஜூஸ் சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனவே புதிதாக வாங்கி வரப்பட்ட பழத்தை வீட்டிலேயே சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் இல்லாமல் ஜூஸ் தயாரித்து பருவது நல்லது. உதாரணத்திற்கு, ஆப்பிள் ஜூஸ் கல்லீரல் நச்சுக்களை அகற்றுகிறது, ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
ப்ரோபயாடிக் மற்றும் காய்கறிகள்: காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை பச்சையாக சாப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகளில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் முகப்பரு போன்ற தோல் நிலைகளைக் குறைக்க உதவுகிறது. தயிர் மற்றும் மோர் போன்ற சத்தான பால் பொருட்களை உட்கொள்வது மழைக்காலத்தில் நோய்களைத் தவிர்ப்பதற்கு உதவும்.
இஞ்சி மற்றும் பூண்டு: அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு ஆகியவை இஞ்சி மற்றும் பூண்டில் நிறைந்துள்ளதால், அவை காய்ச்சல் மற்றும் குளிரில் இருந்து விடுபட உதவுகிறது. இஞ்சி டீ தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தை போக்க உதவும், அதேசமயம் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இஞ்சி சாறுடன் சில துளிகள் தேன் கலந்து கொடுக்கலாம்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்: மழைக்காலத்தில் உணவு மற்றும் தண்ணீரின் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது, எனவே அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒமேகா -3 போன்ற கொழுப்பு அமிலங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன், இறால், சிப்பிகள், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் பிற கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் காணப்படுகின்றன.