நமது வீடுகளில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருக்கும். அதே வேளையில் வாந்தி மயக்கம் போன்ற உணர்வுகளால் கர்ப்பம் அடையும் பெண் அவதிப்படுவதும் உண்டு. இந்த அறிகுறிகள் இருந்தாலே மருத்துவரிடம் சென்றோ அல்லது வீட்டில் அனுபவமுள்ள பெரியவர்கள் நாடி பிடித்து பார்த்தோ கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கண்டுப்பிடிப்பது உண்டு. ஆனால் அதற்கு முன்னரே கூட மேலும் பல அறிகுறிகள் வைத்து நீங்களே உணர முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
வாசனை நுகர்வு தன்மை : கர்ப்ப காலத்தில் வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும் என சொல்வதுண்டு. இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும். அதனால் தான் சில கர்ப்பிணி பெண்களுக்கு தாளிக்கும் வாசனை ஒத்துக்கொள்ளாமல் வாந்தியை ஏற்படுத்தும். கர்ப்பக்காலத்தில் எப்போதும் பிடித்த வாசனை பிடிக்காமல் போவதும் திடீரென சில வாசனை பிடிப்பதும் உண்டு.
மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள் : ஒரு பெண் கருத்தரிக்கும்போது, அவளது மார்பகத்தில் சில மாற்றங்களை உணர முடியும். குழந்தைக்கு தேவையான தாய்பால் சுரப்பிற்காக ஹார்மோன்கள் தயாராவதால், சில அசெளகரியமான உணர்வுகள் தோன்றும். திடீரென மார்பகங்கள் பெரிதாகி விட்டது போன்ற உணர்வு, மென்மையான அல்லது கனத்த மார்பகங்களை உணரலாம். மார்பக காம்புகள் தடித்து, கருமையாக மாற ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் பெண் கர்ப்பம் தரித்துவிட்டதை உறுதி செய்யக்கூடிய முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.
வயிற்றில் அசெளகரியம் : வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர்வீர்கள். இது உங்கள் அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். ஏனெனில் கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர்வீர்கள்.இந்த அறிகுறிகள் தீவிரமாகும் வரை பலரும் இந்த அறிகுறிகளை கவனிப்பதில்லை. அதே நேரம் இந்த அறிகுறிகளை அறிந்ததும் நீங்களாக முடிவெடுக்கவும் செய்யாமல் மருத்துவரை அணுகி கருவின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.
மாதவிடாய் சுழற்சி : மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படும். இரத்தபோக்கு திட்டு திட்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கருவுற்ற மகளிருக்கு மாதவிடாய் தள்ளிப்போகும். அதன் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை வைத்து மருத்துவரை அணுகி உறுதி செய்துக்கொள்ளுதல் அவசியமாகும்.மாதவிடாய் தள்ளிப்போவது என்பது பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் மிக முக்கியமான அறிகுறியாகும். ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களின் மாதவிடாய் ஆனது 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தள்ளிப்போனால் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது. மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் அடுத்த மாதவிடாய் காலத்தை எதிர்நோக்குவதற்குள் கருவுற்ற அறிகுறிகள் வெளிப்படும்.
குமட்டல் : கர்ப்பம் தரித்த பெண்களுக்கு குமட்டல் உணர்வு ஆரம்ப கட்டத்திலேயே தோன்ற ஆரம்பிக்கும். மாறாக சில பெண்களுக்கும் சில மாதங்கள் கழித்து தோன்ற ஆரம்பிக்கும்.மார்னிங் சிக்னஸ் என்று சொல்லகூடிய அதிகாலை சோர்வும் குமட்டலும் உண்டாக கூடும். சாப்பிட்டாலும் வயிறு காலியாக இருந்தாலும் இந்த உணர்வு அப்படியே இருக்கும். சில நேரங்களில் வாசனை மூலமாகவும் இந்த குமட்டல் உணர்வு தோன்றும்.
பசியும் பசியின்மையும் : நாள் முழுவதும் பசி உணர்வு மிகுந்திருக்கும். அதே நேரம் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர பிற உணவுகள் மீதும் மோகம் அதிகரிக்கும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.இப்படி உணவின் பிடிப்பிலும் ஒரு மாற்றம் உண்டாகும். அதே நேரம் எப்படி சமைத்தாலும் சாப்பிட முடியாது. இந்த அறிகுறிகள் எல்லாமே நீங்கள் கருத்தரித்தலுக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.
உடல் வெப்பநிலை : வழக்கத்தை விட உடல் வெப்பநிலை சூடாக இருக்கும். உடலில் உண்டாகும் அசெளகரியத்தால் காய்ச்சல் வருவது போல தோன்றும். இரவு முழுவதும் தூங்கி காலையில் ஓய்வு எடுத்தாலும் கூட காலையில் எழுந்ததும் மீண்டும் உடல் அசதியாக இருக்கும். ஆனால் இவையெல்லாமே காய்ச்சலுக்கான அறிகுறி அல்ல. கருத்தரித்தலுக்கான அறிகுறி தான் என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் உணர்ந்துகொள்வீர்கள்.
சோர்வு : வழக்கத்தை விட உடல் அதிகமாக சோர்வாக இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தல் என்று சொல்லலாம். உடலில் உண்டாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இந்த சோர்வு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கும். மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது இந்த சோர்வு ஆட்கொண்டால் அதிலும் தொடர்ந்து இருந்தால் கருத்தரித்தலுக்கான அறிகுறிதான் என்று சொல்லலாம்.