வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் இப்போதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. அதற்காக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க முடியுமா? இந்த வெயில் காலத்தில் நம் உடல் உஷ்ணம் அதிகரிக்க சூரியன் மட்டும் காரணமல்ல. நாம் சாப்பிடக் கூடிய சில உணவுகளும் கூட உஷ்ணத்தை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் அவ்வபோது தண்ணீர் அருந்தி நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதுடன் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றலாம்.
வெப்பத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் : கோடை காலத்தில் நேரடியாக தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும் என்பதில்லை. தண்ணீர் சத்து கொண்ட பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களும் கூட நல்ல பலனை தரும். அந்த வகையில் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், பாதாம் பிசின் போன்றவற்றை ஜூஸ் மற்றும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். அது மிகுந்த குளிர்ச்சியை தரும்.