கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான காலமாகும். கரு உருவாகி இருப்பது உறுதி செய்த நாள் முதல், குழந்தை பிறப்பது வரை பல அழகான விஷயங்களின் தொகுப்பாக கர்ப்ப காலம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். வயிற்றுக்குள் குழந்தை அசைவது, நகர்வது, வயிற்றில் உதைப்பது ஆகியவற்றை உணரும் ஒவ்வொரு தருணமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் பல பெண்களுக்கு கர்ப்ப காலம் பிரச்சினையாகவும் இருந்துள்ளது.
கர்ப்பகாலம் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். எடை அதிகரிப்பு, உடல் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், வலி, அசௌகரியம், கால் வீக்கம் ஆகியவை கர்ப்ப காலத்தில் இயல்பானதுதான். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் பெண்ணின் உடலும் ஆரோக்கியமும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும். கர்ப்பம், குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண்ணின் உடல் எப்படியெல்லாம் மாறும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மார்பக அளவு மற்றும் வடிவில் மாற்றம் : குழந்தை பிறந்த உடனேயே ஒரு பெண்ணின் உடலில் முதலில் மாறுதல் அடைவது மார்பகங்கள் தான். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரப்பதற்கு ஏற்ப பெண்ணின் மார்பகங்கள் அளவு அதிகரிக்கும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டரோன் என்ற இரண்டு ஹார்மோன்களும் கணிசமாக குறைந்து, தாய்ப்பால் சுரப்பதற்கு தேவையான ப்ரோலாக்டேன் என்ற ஹார்மோன் அதிகரிக்கும் பொழுது, வழக்கத்தை விட மார்பகங்கள் பெரிதாக மாறும். குழந்தை பிறந்த 2 – 3 நாட்களுக்குள்ளேயே இந்த மாற்றங்கள் தெரியும். அது மட்டுமின்றி மார்பகங்களில் ஏற்படும் வடிவ மாற்றத்தால், உறுதியான மார்பகத்தில் லேசாக தொய்வு உண்டாகும்.
வயிற்றுப்பகுதியில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் : கர்ப்ப காலத்தில் குழந்தை எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு வயிறு பெரிதாக இருக்கும். வயிற்றின் மேற்பகுதியிலிருக்கும் சருமமும் விரிவடையும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு ஒட்டுமொத்தமாக வயிற்றின் அளவு சுருங்குவதால், சருமத்தில் சுருக்கம் உண்டாகி அது ஸ்ட்ரெட்ச் மார்க்சை உருவாக்குகிறது. காலப்போக்கில் இந்த அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
காலணி அளவு : உடல் எடை, உடல் வடிவம் தான் மாறுமே தவிர குழந்தை பிறந்த பிறகு காலணி அளவு கூட மாறுமா என்பது ஆச்சரியமாக இருக்கலாம். இயற்கையாக ஒரு பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் 11 – 16 கிலோ வரை எடை அதிகரிக்கிறார். இந்த எடை அதிகரிப்பு பாதங்களில், கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குதிகால் இன் வடிவம் மாறி தட்டையாக மாறுகிறது. அதுமட்டுமின்றி உடலில் சுரக்கும் ரிலாக்ஸின் என்ற ஹார்மோன் கால்களில் இருக்கும் லிகமென்ட்களை தளர்த்துகிறது. எனவே உங்களுடைய பாதங்களின் அளவு கொஞ்சம் அதிகரித்து தட்டையாகிறது அல்லது நீலமாகிறது. இதனால் காலணி அளவு அதிகரிக்கும்.
பிறப்புறுப்பில் மாற்றங்கள் : குழந்தை பிறந்த பிறகு ஏற்படக்கூடிய மிகப்பெரிய மாற்றங்களில் மற்றொன்று பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்தான். சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இதைப்பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு பல நாட்களுக்கு ரத்தப் போக்கு நீடிக்கும். ஒரு சில பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு இருந்த பிறப்புறுப்பின் அளவை விட குழந்தை பிறந்த பிறகு நிரந்தரமாக அளவு கொஞ்சம் அகலமாக மாறிவிடும் என்று இங்கிலாந்தின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் கூறுகிறது.
பாலியல் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் : கர்ப்ப காலம், குழந்தை பிறப்பு, அதுமட்டுமின்றி குழந்தையை வளர்ப்பது என்று நீண்ட காலத்திற்கு பெண்ணின் உடலும் மனமும் பல்வேறு சவால்களையும் அழுத்தத்தையும் எதிர் கொண்டிருக்கும். தாய்ப்பால் சுரப்பதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்கும் போது பாலியல் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த பிறகு பாலியல் ஆர்வமும் ஈடுபாடும் இயல்பாகவே குறையும்.