நம்மில் பலரது புத்தாண்டு தீர்மானத்தில் உடற்பயிற்சிகளை செய்ய தொடங்குவதும், ஃபிட்டாக உடலை வைத்து கொள்ள வேண்டிய முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதும் முக்கியமான விஷயங்களாக இருக்கிறது. ஆனால் தற்போது பின்பற்றப்பட்டு வரும் அதிவேக வாழ்க்கை முறை நம்மை பற்றி சிந்திக்கக் கூட நமக்கு நேரத்தை தருவதில்லை. அப்படி இருக்க ஜிம்மில் சேருவது என்பது பலருக்கு கனவாகவே இருக்கிறது. அப்படியே சேர்ந்தாலும் சேர்ந்த புதிதில் சில நாட்கள் ஜிம்மிற்கு எட்டி பார்ப்பதோடு சரி. அதன் பிறகு அடுத்த புத்தாண்டிற்கு தான் பலர் ஜிம் பக்கம் செல்வார்கள்.
இந்த லிஸ்ட்டில் நீங்களும் ஒருவரா.? உடற்பயிற்சி கூடங்கள் மட்டுமே உடலை ஃபிட்டாக வைத்து கொள்தற்கான ஒரே வழி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உடல் ஃபிட்னஸிற்காக ஜிம் செல்வது மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளரை நாடுவது சிலருக்கு பட்ஜெட் பிரச்சனையாக இருக்கலாம். ஜிம்மிற்கு போகாமலேயே ஃபிட்டாக உடலை வைக்க உதவும் சில டிப்ஸ்கள் இங்கே..
முடிந்த போதெல்லாம் வாக்கிங்.. வாக்கிங்கை நம்மில் பலர் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறோம். உங்கள் தினசரி வழக்கத்தில் வாக்கிங்கை சேர்க்க நீங்கள் பப்ளிக் பார்க்குகளுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களுடன் நீங்கள் அதிக நேரம் போன் கால் பேசும் போது கூட வீட்டில் இருக்கும் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு தொடர்ந்து நடந்து செல்லலாம். உதாரணமாக 30 நிமிடங்கள் நீங்கள் ஒரு கால் பேசுகிறீர்கள் என்றால் அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் ரூம்களை எத்தனை முறை சுற்றி வரலாம் என்பதை யோசித்து பாருங்கள். அரை மணி நேரம் வீட்டிர்குலேயே வாக்கிங் செய்வது கூட உடலை ஃபிட்டாக்க உதவும்.
லிஃப்ட்களுக்கு பதிலாக படிக்கட்டு.. லிஃப்ட் மற்றும் படிக்கட்டு ஆகிய இரண்டும் ஒரு சேர இருக்கும் இடத்தில நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது லிஃப்ட்டை தான். ஏனென்றால் அடுத்தடுத்த தளங்களை விரைவாக அடைய எண்ணுகிறோம் அல்லது சோம்பேறித்தனம் காரணமாக இருக்கும். ஆனால் படிக்கட்டுகளை பயன்படுத்தி ஏறுவது கலோரிகளை எரிக்கவும், உங்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உங்கள் சிறந்த உடல் எடையை பராமரிக்கவும் மிகவும் பயனுள்ள வழியாக இருக்கும்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள்.. உடலை ஃபிட்டாக்குவதில் கேம்களுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விளையாடும் போது அவர்களுடன் சேர்ந்து நீங்களும் உற்சாகமாக விளையாடுவது ஒரு சிறந்த வழி. கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் அல்லது ஷூட் ஹூப்ஸ் உள்ளிட்ட கேம்களில் குழந்தைகளுடன் உங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம்.
செல்லப்பிராணியுடன் வாக்கிங்.. சிலருக்கு வெளியே வாக்கிங் செல்லும் போது தனியாக செல்வதில் விருப்பம் இருக்காது. எனவே வாக்கிங் செல்லும் போது கூடவே உங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து செல்வது சிறந்த விருப்பமாக இருக்கும். அதே போல அலுவலகத்திலிருந்து சிறிது தொலைவில் உங்கள் வாகனத்தை நிறுத்த முடிந்தால் நிறுத்துங்கள். உங்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு விறுவிறுப்பான நடையை மேற்கொள்ள இது உதவும்.