நம்மை நாம் ஏற்றுக் கொள்வது : முதலில் நாம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்ன வழி என்றால், நாம் எவ்வளவு மதிப்பு மிகுந்தவர் என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய சிறப்புகளை நாமே உணராவிட்டால் வேறொருவர் பாராட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்களை பற்றி சாதகமான முறையில் பேச தொடங்கவும். நம்பிக்கையை கட்டமைப்பது ஒரே நாள் இரவில் நடந்து விடாது. ஆனால், இதனை படிப்படியாக பழக்கிக் கொள்ள வேண்டும்.
உங்கள் கவலைகள் உண்மையல்ல : நான் கொஞ்சம் சுமாரான நபர்! மக்களுக்கு என்னை பிடிக்காது! எனக்கு எப்படி பேச வேண்டும் என்றுகூட தெரியாது! இப்படியான எண்ணங்களை விட்டுவிடுங்கள். உங்களைப் பற்றி நீங்களே எதிர்மறையான சிந்தனைகளை கட்டமைத்து வைத்திருந்தால், மற்றவர் முன்னிலையில் எப்படி நெஞ்சம் நிமிர்த்தி உங்களால் நிற்க முடியும்? நம்பிக்கை கொண்டால் மட்டுமே உங்கள் தயக்கத்தை ஒழிக்க முடியும்.
பேச்சுத்திறனை மேம்படுத்தவும் : மற்றவர் முன்னிலையில் நம் மதிப்பை உயர்த்துகின்ற மிக முக்கியமான விஷயம் இது. நாம் எப்படி பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை வைத்து தான் பிறர் நம்மை எடை போடுவார்கள். எதையும் நச்சென்று, மன உறுதியோடு பேச வேண்டும். உண்மையான கருத்து என்றால் ஆழமாக, ஆணித்தரமாக பேச வேண்டும். இதை மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும்.
கனிவானவராக இருக்க வேண்டும் : சமூகத்தின் மீது சலிப்புணர்வு இருப்பது இயல்பான விஷயம் தான். ஆனால், எல்லா விஷயங்களிலும் சந்தேகத்தோடு பயணிப்பது பலன் தராது. ஆகவே, கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு இயல்பாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். பல சூழ்நிலைகளில் கனிவான குணாதிசயத்தை வெளிப்படுத்தினால் தவறுகள் கூட சரியாக மாறும்.