பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசிஸ் (பிசிஓடி) என்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு கோளாறு ஆகும். சமீபத்திய கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, இந்தியாவில் 20-29 வயதுக்குட்பட்ட பெண்களில் 16% பேர் PCOS/PCOD- யால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிசிஓஎஸ் பிரச்சனையால் மாதவிடாய் கோளாறுகள், கருத்தரிப்பதில் சிக்கல், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிறது, இது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் ஏற்படுகிறது. இதனால் பிசிஓஎஸ் பிரச்னை ஏற்படுகிறது.
இதன் விளைவாக பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதனை ஆரம்பதியிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் இதய நோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், டைப் II நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து, கருவுறுதலில் பிரச்னை, கர்ப்பகாலத்தில் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். எனவே பிசிஓஎஸ் அல்லது பிசிஓடி பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவது அவசியம். நமது அன்றாட உணவு முறையில் மாற்றம் செய்து ஆரோக்கியமான டயட்டை பின்பற்றினாலே விரைவாக இருந்த பிரச்சனையை சரி செய்ய முடியும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கு காண்போம்,.
காய்கறிகள், கீரைகள் : பெண்கள் தங்கள் உணவில் குறைந்தது தினமும் 1-2 முறை ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின் பி சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது. குறிப்பாக இன்சுலின் கட்டுப்பாடு மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கருவுறுதலை ஆதரிக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். எனவே, வைட்டமின் பி அதிகமாக உட்கொள்வது பிசிஓஎஸ் அறிகுறி பிரச்சனைகளை அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். அதாவது பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி ஆகியவற்றுடன் தொடர்புடைய மற்ற இரண்டு அறிகுறிகளான உடலில் முடி வளர்வது மற்றும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது.
ஒமேகா 3: ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒமேகா-3 முக்கியமானது. சால்மன் மற்றும் மத்தி போன்ற சில மீன்களில் ஒமேகா -3 நிறைந்துள்ளது. ஒமேகா -3 மன அழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அசைவ உணவு சாப்பிடாதவர்கள்மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். சைவ உணவு உண்பவர்கள் பீன்ஸ், ஆளி விதைகள் அல்லது அக்ரூட் பருப்பு, தயிர் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நல்லது.
பருப்பு வகைகள்: பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது அனைவருக்கும் நல்லது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை, பீன்ஸ், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, பட்டாணி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவைற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இவற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இவற்றில் கொழுப்புகள் இல்லை என்பதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. மேலும் இவற்றில் புரதங்கள் நிறைந்திருப்பதால், சாலட்டுகள், சட்னி, குழம்புகளில் சேர்த்து சாப்பிடலாம்.
பெர்ரி: பெர்ரி பழங்கள் சத்தானவை. இவற்றில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளதால் பிசிஓஎஸ் நோயாளிகளுக்கு பெர்ரி மிகவும் நன்மை பயக்கும். உயர் கார்ப் உணவுகளோடு எடுத்துகொள்ளும் போது அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கப்படும் போது இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எடை இழப்பு, நீரிழிவு மற்றும் அஜீரணத்தை நிர்வகிக்கவும் உதவுகின்றன. கூடுதல் பலன்களுக்காக ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரிகளின் கலவையை தயிருடன் உட்கொள்ளலாம்.
ஓட்ஸ் : ஓட்ஸில் நம் உடலுக்கு தேவையான, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளன. ஓட்ஸ் பிசிஓஎஸ் பிரச்சனைக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறந்த உணவாகும். ஓட்ஸ் உடலில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கும். ஓட்ஸில் வைட்டமின் பி உள்ளது, இது புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ஓட்ஸ் உள்ள துத்தநாகம் PCOSஆல் ஏற்படும் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. ஓட்ஸ்சில் பால் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான ஓட்ஸ் உணவு தயார். ஓட்ஸ் உணவுடன், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.