வருடாந்திர விடுமுறையை போல சீரான இடைவெளியில் வழக்கமான சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வதும் நமக்கு முக்கியம். வேலைகளுக்கு நடுவே சில நாட்கள் ஓய்வெடுக்க மற்றும் புத்துணர்ச்சியாக இருக்க விடுமுறை உதவுகிறது. இது போல வழக்கமான பரிசோதனைகள் ஏதேனும் சாத்தியமான உடல்நலப் பிரச்சனைகளை துவக்கத்திலேயே கண்டறிய உதவுகின்றன.
இதன் மூலம் உடலில் இருக்கும் பிரச்சனைகள் தீவிரமடைவதற்கு முன்பே அவற்றை தீர்க்கலாம். உடல்நலம் என்று வரும் போது கண் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. நம் வயதை பொருட்படுத்தாமல் வழக்கமான கண் பரிசோதனை நம் பரிசோதனை பட்டியலில் இருக்க வேண்டும். வழக்கமான அடிப்படையில் செய்து கொள்ளப்படும் கண் பரிசோதனைகள் பார்வையை வலுவாக வைப்பதோடு, நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருக்கும் கண் நோய்களை கண்டறியவும் உதவுகின்றன. உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் முக்கிய 5 அறிகுறிகள்:
பார்வையில் மாற்றம் : வெளியே செல்லும் இடங்களில் கொடுக்கப்படும் அல்லது நீங்கள் பார்க்கும் மெனுவில் காட்டப்படும் பொருட்களைப் படிக்க முன்பை விட கூடுதல் முயற்சி தேவைப்பட்டாலோ அல்லது வாகனம் ஓட்டும்போது சாலைகளில் பார்ப்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தாலோ நீங்கள் விரிவான கண் பரிசோதனை செய்து கொள்ள விரைவில் கண் மருத்துவரை அணுக வேண்டிய நேரம் என்பதை குறிக்கிறது. அதே போல மங்கலான பார்வை கிளௌகோமா போன்ற பிற சிக்கலான கண் நிலைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
வலிகள் : உங்கள் கண் பார்வையில் பிரச்சனை இன்றி நீங்கள் சாதாரணமாக இருக்கலாம். எனினும் நீங்கள் அவ்வப்போது தலைவலி, கண் வலி அல்லது ஸ்ட்ரெஸ்ஸை அனுபவிக்கிறீர்களா.! இது உங்கள் பார்வையில் மாற்றங்கள் ஏற்படுவதையோ அல்லது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிற கண் பிரச்சனைகள் இருப்பதையோ குறிக்கிறது. உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் தலைவலி கண்களில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுவதை குறிக்கலாம்.
டயாபடிக் ரெட்டினோபதி : நீரிழிவு கண்களைப் பாதிப்பதோடு குருட்டுத்தன்மை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். டயாபடிக் ரெட்டினோபதி என்ற கண் நோய் நீரிழிவு நோயாளிகளுக்கு லேசான பார்வை இழப்பு முதல் குருட்டுத்தன்மை வரை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். இது ரெட்டினாவில் உள்ள ரத்த நாளங்களை பாதிக்கிறது. சில நேரங்களில் இந்த நோய் அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கும். ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையாவது விரிவான கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
குடும்ப உறுப்பினர்களுக்கு கண் நோய் வரலாறு : ரெட்டினோபிளாஸ்டோமா மற்றும் கிளௌகோமா போன்ற சில கண் நிலைகள் சிலரின் குடும்பத்தில் பரம்பரையாக இருக்கலாம். எனவே உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மெடிக்கல் ஹிஸ்ட்ரி மற்றும் கண் நிலைமைகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருப்பதும், கண் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருப்பதும் அவசியம். மேலே நாம் பட்டியலிட்ட அறிகுறிகள் எதுவும் உங்களுக்கு இல்லாமல் போனாலும் கூட வயதை பொருட்படுத்தாமல் வழக்கமான கண் பரிசோதனை செய்து கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.