பெண்களின் வயது அதிகரிக்கும்போது அவர்களது இடுப்புப் பகுதி பலவீனம் அடைவதன் காரணமாக பெண்ணுறுப்பு இறுக்கமற்றதாக மாறும். அதேபோல தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது குழந்தை வெளிவர ஏதுவாக பெண்ணுறுப்பு சுவர்கள் மற்றும் தசைகள் தளர்வு அடையும். இதனால் பெண்ணுறுப்பின் இறுக்கம் குறையும். இது தற்காலிகமானது என்றாலும், சில பெண்களுக்கு நிரந்தரமாகவே தளர்வாக இருக்கும்.
இடுப்பை உயர்த்துதல் : தரையில் மல்லாக்க படுத்துக் கொண்டு, கால்களை இரண்டையும் ஊன்றியபடி, தலை மற்றும் உடல் தரையில் படர்ந்திருக்க இடுப்பு பகுதியை மட்டும் மேலே உயர்த்தி பயிற்சி செய்யலாம். இவ்வாறு இடுப்பு மற்றும் பின்புறம் ஆகியவை மேலே உயர்ந்து நிற்கும்போது வயிற்றுப் பகுதியை நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பெண்ணுறுப்பு இறுக்கம் அடையும்.
கீகல் பயிற்சிகள் : சிறுநீர் பை, கர்ப்பப்பை, சிறுகுடல், மலக்குடல் ஆகிய அனைத்துமே இடுப்புப் பகுதியின் பக்கபலத்தில் இருப்பவை ஆகும். இவற்றையெல்லாம் பலப்படுத்தும் வகையில் செய்வதுதான் கீகல் பயிற்சிகள் ஆகும். கீகல் பயிற்சிகளின் போது தசைகள் தளர்வடைந்து, பின்னர் மீண்டும் இறுக்கம் அடையும். இதே பயிற்சிகளை மீண்டும், மீண்டும் செய்யும்போது பெண்ணுறுப்பு இறுக்கம் அடையும்.
ஸ்குவாட்ஸ் : நாம் கால்களை மடக்கி முட்டிகளின் பலத்தில் உட்கார்ந்து, எழுவது போன்ற பயிற்சியின் மூலமாக பெண்ணுறுப்பு பகுதி தசைகளை இறுக்கமாக மாற்றலாம். கால்களை கொஞ்சம் அகல வைத்து நின்று கொண்டு, சேரில் அமர்வதை போல உட்கார்ந்து, மீண்டும், மீண்டும் அதையே செய்ய வேண்டும். இடுப்பு தசைகளும் இதனால் வலுவடையும்.