பல் வலி என்பது எத்தனை கொடுமையானது என்பது அதனை அனுபவித்தவர்களை கேட்டு பாருங்கள். பல் வலி நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக பல் வலி பகல் நேரத்தில் மிதமானதாக இருக்கும். மிதமான வலியே அசோகரியத்தை ஏற்படுத்தும் போது, இந்த வலியானது இரவு நேரம் வரும்பொழுது அதிகரிக்க தொடங்கிவிடும். இது ஒருவரின் தூக்கத்தை பாதிக்கக்கூடும். இதனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியாமல் போகிறது.
பல்வலியானது பல் சொத்தை, பற்களில் ஏற்படும் தொற்று அல்லது ஈறு பிரச்சனை போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். அதே நேரத்தில் இரவில் நாம் தரையில் அல்லது மெத்தையில் படுக்கும் பொழுது, நமது தலையை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உணர்திறன் மிகுந்த பகுதிகளில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் பல்வலி தீவிரமாகிறது. இன்னும் சிலருக்கு இரவில் தூங்கும் போது, பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கலாம். இதன் காரணமாகவும் பல் வலி ஏற்படலாம்.
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேற்பட்டு உங்களுக்கு பல்வலி இருந்தால் கண்டிப்பாக ஒரு டென்டிஸ்டை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஒருவேளை உங்களுக்கு மிதமான வலி இருந்தால் அந்த அசோகரியத்தை போக்குவதற்காக நீங்கள் ஒரு சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள். அப்படி பல் வலியை போக்கக்கூடிய ஒரு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாயை கொப்பளிக்கவும் : உப்பு கலந்த நீரானது பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து வாயில் ஊற்றி கொப்பளிப்பது ஏதேனும் வீக்கம் அல்லது அசௌகரியம் இருப்பின் அதனை போக்க உதவுகிறது. மேலும் வாயில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும் அதனை ஆற்ற உதவுகிறது.
வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் : வெண்ணிலா எக்ஸ்ட்ராக்டில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால் இது ஒரு மருந்தாக செயல்படுகிறது. அதோடு வெண்ணிலா எக்ஸ்ட்ராக்டில் இருக்கக்கூடிய ஆல்கஹால் வலியை மரத்துப் போக செய்யும் தன்மை கொண்டதாக அமைகிறது. ஆகவே உங்களுக்கு பல் வலி இருந்தால் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்தி பார்க்கலாம்.
பூண்டு : பூண்டு பற்றி சொல்லவா வேண்டும். பூண்டில் இல்லாத நன்மைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. பூண்டு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக இது ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு காரணமாக இது வாயில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதன் மூலமாக பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
பெப்பர்மின்ட் டீ பேக் : பயன்படுத்தப்பட்ட பெப்பர் மின்ட் டீ பேக்கை 2 நிமிடங்கள் குளிர வைத்து, அதனை வலி உள்ள பகுதியில் ஒத்தி எடுக்கும் பொழுது வலியானது குறைவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த வீட்டு வைத்தியங்கள் அனைத்தையும் முயற்சி செய்த பிறகும் வலி நீடிக்கிறது என்றால் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெறுங்கள்.