நாம் மறந்து போன அல்லது தொழில்நுட்ப வளர்ச்சியால் பின்தங்கி போன மிகவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் ஒன்று மண்பானைத் தண்ணீர். குளிர்சாதன பெட்டிகள் பரவலாக பயன்படுத்த தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் எல்லோர் வீட்டிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஒரு பொருள் மண்பானை. கோடை தொடங்குவதற்கு முன்பு மண்பானை பதப்படுத்தப்பட்டு தயாராகி விடும்.
கோடையின் வெப்பத்தை தணிப்பதற்கு குளிர்ச்சியான தண்ணீர் மட்டுமின்றி மண்பானை தண்ணீர் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஜில்லென்று ஒரு கிளாஸ் பானைத் தண்ணி குடித்தால் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்து குடிப்பது போலவே மண்பானையில் வைக்கப்படும் தண்ணீரும் குளிர்ச்சியாக மாறும். அது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும்.
வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைக்கும் : பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. மண் பானையில் வைக்கப்படும் தண்ணீர் உங்களுடைய மெட்டபாலிசம் என்று கூறப்படும் வளர்சிதை மாற்றத்தை ஆக்டிவாக வைத்திருக்கும். இயற்கையான பொருளில் எந்தவித ரசாயனமும் சேர்க்காமல் செய்யப்படும் பானையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கும். எனவே இது உடலின் மெடபாலிக் அமைப்பை மேம்படுத்தும்.
உடலுக்கு கேடு விளைவிக்காத குளிர்ச்சி : பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் இது இயற்கையாகவே குளிர்ச்சியாக மாறுகிறது. ஃபிரிட்ஜில் வைப்பது போல டெம்பரேச்சர் குறைக்கப்பட்டு குளிர்ச்சியாக மாறுவதில்லை. எனவே ஜில்லென்று இருக்கும் பானைத் தண்ணீர் உடலுக்கு எந்த கேடும் விளைவிக்காது. அது மட்டுமின்றி பானைத் தண்ணீர் குடிப்பதால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் அல்லது தொண்டை கட்டிக்கொள்ளும் என்று என்று எந்த பிரச்சனைகளும் உண்டாகாது.
சூரிய வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு : பண்டைய காலங்களில், அதிகமாக கோடை காலத்தில் தான் பானை பரவலாக பயன்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் வெப்பம் மற்றும் சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தான். எனவே சூரியனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சன் ஸ்ட்ரோக் ஆகியவற்றிலிருந்து தடுக்க உதவும்.
வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு : சாதாரணமாக பாத்திரங்களில் வைத்து குடிக்கும் தண்ணீரை விட மண்பானையில் குடிக்கும் தண்ணீருக்கு உடலை குணப்படுத்தும் சக்தி அதிகம். பானையை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களில் இயற்கையான கனிமங்கள் நிறைந்துள்ளது. எப்படி செம்புப் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் வைத்து குடிப்பது நச்சுக்களை நீக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறதோ, அதேபோல பானையில் வைக்கப்படும் தண்ணீரும் உடலில் இருக்கும் ஆல்கலைன் அளவை சரிசெய்து அசிடிட்டியை குறைக்கிறது.
பல இல்லங்களில் தற்போதும் பாலை தயிருக்கு உறை ஊற்றும்போது பானையில் ஊற்றுவது வழக்கம். அதேபோல ஒரு சில ஹோட்டல்களிலும் மண்பானையில் தயிர் வழங்குவார்கள். இதில் இதற்கு காரணம் பானையில் இருக்கும் கனிமச்சத்துக்கள் அந்த உணவில் சேரும் என்பதுதான். பானை தண்ணீர் தொடர்ந்து குடித்து வரும்போது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகள் மற்றும் அசிடிட்டி நீங்கி செரிமானம் மேம்படும்.