

திருமண வாழ்க்கையில் முக்கிய சந்தோஷ திருப்பு முனையாக அமைவது குழந்தை செல்வமே. நம் தாத்தா,பாட்டி காலங்களில் இருந்த உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் என எல்லாமே ஆரோக்கியமானவை. ஆனால் தற்போது நம் வாழக்கை மற்றும் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் நவீனமாகி விட்டன ஆனால் முன்னோர்களிடம் இருந்த ஆரோக்கியம் நம்மிடம் தற்போது இல்லை என்பதே கசப்பான உண்மை. 35 முதல் 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் திருமணமான பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டாலும் அவர்கள் இயலாகவே இருப்பர். இன்று இருப்பது போல கிரைண்டர், மிக்சி கிடையாது என்பதால் வழக்கமான வீட்டு வேலைகள் அனைத்தையும் 9 மாதங்கள் வரை எப்போதும் போலவே செய்வர்.


இதனால் பெரும்பாலும் அவர்களுக்கோ, அவர்கள் வயிற்றில் இருந்த கருவிற்கோ ஆபத்து நேராது. ஆனால் இப்போது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கர்ப்பம் தரித்து விட்டாலே ஏராளமான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் எதை செய்தாலும் அது கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவதோடு, செய்யும் செயல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.அதன்படி கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய சில வீட்டு வேலைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.


பர்னிச்சர்களை நகர்த்துவது அல்லது கனமான பொருட்களை தூக்குவது : கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மூட்டுகள் மற்றும் இடுப்பு தளத்தில் உள்ள கடின திசுக்களில் தளர்வு உண்டாகும். எனவே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு பின், கனமான பொருட்களை தூக்குவது அல்லது நகர்த்துவது போன்ற வேலைகளை செய்ய கூடாது. அப்படி செய்வது முதுகுவலி மற்றும் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.


அதிக நேரம் நிற்க கூடாது : கர்ப்பிணி பெண்கள் வீட்டு வேலைகளை செய்யும் போது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று நீண்ட நேரம் நிற்க கூடாது என்பது. அதிக நேரம் நின்று கொண்டே செய்ய கூடிய எந்த ஒரு வீட்டு வேலையையும் செய்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு மற்றும் மார்னிங் சிக்கன்ஸ் ஏற்படும். அவர்கள் இதை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நீண்ட நேரம் நிற்பதால் கால்களுக்கு அழுத்தம் ஏற்படும், இதனால் வீக்கம் மற்றும் முதுகுவலி உண்டாகும். சமைக்கும் போது நீண்ட நேரம் நிற்காமல் அவ்வப்போது இடைவெளி எடுத்து கொண்டு வேலைகளை தொடரலாம்.


குனிந்து நிமிர கூடாது : வீட்டு தரையை மாப் போட்டு கிளீன் செய்வது, துணிகளை துவைப்பது உள்ளிட்ட பிற குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய கடின வேலைகளை இழுத்துப்போட்டு கொண்டு செய்ய கூடாது. ஏனென்றால் கருவின் எடை அதிகரிப்பு உடலின் ஈர்ப்பு மையத்தில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தும், அந்த நேரத்தில் உடலை வளைத்து வேலை செய்வது கீழ் முதுகில் இருந்து கால் வரை இயங்கும் இடுப்பு நரம்புக்கு ஆபத்தானது.


உயரத்தில் ஏறக்கூடாது : கர்ப்பிணிகள் தங்களுக்குள் இருக்கும் இன்னொரு ஜீவனின் எடையை சுமக்கும்போது ஸ்டூல் அல்லது ஏணியில் ஏறுவது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய செயல். கூடுதல் எடையை சுமப்பதால் உயரத்தில் ஏறும் போது கர்ப்பிணிகளின் உடல் சமநிலையில் இருக்காது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முன்கூட்டிய பிரசவத்திற்கு அல்லது நஞ்சுக்கொடியை முன்கூட்டியே பிரிக்க வழிவகுக்கும்.எனவே ஒருபோதும் கர்ப்பிணிகள் இந்த தவறை செய்ய கூடாது.


பூச்சிக்கொல்லிகள் & கெமிக்கல் கலந்த கிளீனிங் பொருட்கள் : கர்ப்ப காலத்தில் பெண்கள் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த கூடாது. அதிலிருக்கும் பொதுவான வேதிப்பொருளான பைபரோனைல் பியூடாக்சைட் கருவின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்ய கெமிக்கல் கலந்த கிளீனிங் பொருட்களை வாங்காமல் இயற்கை தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.