உலக அளவில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களும் மாரடைப்பு போன்ற இதய கோளாறுகளால் உயிரிழப்பதை தினந்தோறும் செய்திகளில் காண முடிகிறது. இந்த காரணங்களினால் ஒவ்வொருவரும் தங்களது இதயத்தின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது இன்றியமையாததாக மாறியுள்ளது.
சீரான கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, புகையிலை பழக்கத்தை நிறுத்துதல், குறைந்த கொழுப்பு உணவுகளை உட்கொள்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைக்கலாம். மேலும், ஆண்கள் தங்கள் இதயங்களை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிமுறைகள் பின்பற்றினாலே போதுமானது.
இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சரிபார்க்கவும் : 20 வயதுக்குட்பட்ட நான்கில் ஒரு ஆண் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். 75 வயதை நெருங்கியுள்ள 75 சதவீத ஆண்களுக்குமே உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதாக தரவுகள் தெரிவிகின்றனர். ஆனால், பொதுவாகவே உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு அதன் அறிகுறிகள் ஏதும் வெளிப்படையாக தெரிவதில்லை. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் எந்தவித அறிகுறிகளும் இல்லாமலே நிகழ்கிறது. ஒருவர் அதிக அளவு உடல் எடை கூடும்போது கட்டாயம் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் கொழுப்பு மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கான சோதனைகளையும் ஒவ்வொரு ஆணும் செய்து கொள்ள வேண்டும்.
மது அருந்துவதையும் புகை பிடிப்பதையும் கைவிட வேண்டும் : இன்றைய காலத்தில் பல்வேறு ஆண்களும் இளம் வயதிலேயே புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் கற்றுக் கொள்கின்றனர். புகைப்பிடிப்பது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. மேலும், உடலில் அங்கங்கு ரத்தம் உறைதலையும் ஏற்படுத்துகிறது. அதேபோல மதுப்பழக்கத்தையும் கட்டாயம் நிறுத்த வேண்டும். உடனடியாக நிறுத்த முடியவில்லை எனில் வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் குறைத்துக் கொள்ள முயற்சிக்கவும்.
மன அழுத்தத்தை குறைக்கவும் : அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், நீண்ட நாட்களுக்கு மன அழுத்தத்துடன் இருப்பது ரத்த அழுத்தத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மேலும் வாழ்க்கை முறையிலும், மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி பல்வேறு வித உடல் உபாதைகளை உண்டாக்கும். கிடைத்த ஆய்வுகளின் படி அதிக அளவு மன அழுத்தத்தில் உள்ள ஆண்களுக்கு இதய பாதிப்பும் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, நீங்கள் அதிகமான மன அழுத்தத்துடன் இருப்பதாக உணர்ந்தால் மனநல ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடுவது நல்லது.
உடல் எடையை சீராக வைக்கவும் : இன்றைய காலத்தில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களினாலும் அவற்றில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களினாலும் மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும் உடல் எடை கூடுதல் என்பது இயல்பாகி விட்டது. ஆனால், இந்த உடல் எடை கூடுவது தான் உடலில் பல்வேறு உபாதைகளுக்கும் காரணமாக இருக்கிறது. ஆண்கள் தங்களுடைய உணவில் ஊட்டச்சத்துக்களும் புரதங்களும் நிறைந்துள்ளவாறு உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், உடலுக்கு கெடுதல் தரும் ஆரோக்கியமற்ற உணவு பொருட்களுக்கு பதிலாக, காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
போதுமான அளவு உறக்கம் : உறக்கத்தின் போது தான் நமது உடலுக்கு தேவையான ஓய்வு அளிக்கப்படுகிறது. மேலும் நாள் முழுவதும் உண்டான களைப்பை போக்கிக் கொள்ளவும், அடுத்த நாள் வேலை செய்வதற்கு உண்டான சக்தியை சேகரித்துக் கொள்ளவும் உறக்கம் உதவுகிறது. நீங்கள் நன்றாக உறங்கும்போது உடல் எடை குறைவதில்லை, ஆனால் அதிகப்படியான உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புகள் மூலம் உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது. மேலும், 7 முதல் 9 மணி நேரம் தூங்குபவர்கள் மிகவும் உற்சாகமாகவும் அதிக சக்தியுடனும் செயல்பட உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.