அதிக எடை கொண்ட மற்றும் உடல் பருமன் கொண்ட மக்கள் அனைவரும் எதிர்கொண்டு பிரச்சினை இது. ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் தொப்பை பிரச்சினை இருக்கிறது. குறிப்பாக, பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் இந்தப் பிரச்சினையை அதிகம் எதிர்கொள்கின்றனர். பொதுவாக பெண்களுக்கு கொழுப்பு என்பது இடுப்பு பகுதியில் சேர்கிறது. அதுவே ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில் சேருகிறது.
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு என்பது உடலின் பிற பாகங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக, வயிற்றில் சேரும் விஸ்செரல் என்னும் கொழுப்பானது, இதய நோய் பாதிப்புகளை உருவாக்கக் கூடியதாகும். வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து, தொப்பையை குறைப்பது என்பது சவால் மிகுந்த காரியம் ஆகும். அதே சமயம், தொப்பையை குறைக்க நினைக்கும் பலரும், இந்த பொதுவான தவறுகளை செய்கின்றனர்.
திட்டமிட்ட பகுதியில் எடை குறைப்பது : உடலில் ஒரு பகுதியில் மட்டும் எடையை குறைக்க முடியும் என்பது கட்டுக்கதை ஆகும். நீங்கள் சரியான உணவை உட்கொண்டு, சரியான உடற்பயிற்சிகளை செய்தால், உடலின் பல பாகங்களில் இருந்தும் எடை குறையத் தொடங்கும். உடலில் எந்தப் பகுதியில் முதலில் எடை குறையும் என்பதை வரையறுத்து சொல்ல முடியாது. எனினும், குறிப்பிட்ட பகுதிக்கான உடற்பயிற்சியை நீங்கள் செய்தீர்கள் என்றால், அந்தப் பகுதியின் எடை கொஞ்சம் வேண்டுமானால் குறைய வாய்ப்பு இருக்கிறது.
பட்டினி கிடப்பது : உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், பட்டினி கிடப்பதுதான் இருப்பதிலேயே மாபெரும் தவறு ஆகும். உண்மையை சொல்வதென்றால் நீங்கள் பட்டினி கிடந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. உடல்சோர்வு அடையும். வயிற்றில் விஸ்செரல் கொழுப்பு சேருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். சரியான நேரத்திற்கு, அளவாக சாப்பிடுவது தான் உடல் எடை குறைப்புக்கான நல்ல பழக்கம் ஆகும்.
மோசமான வாழ்வியல் பழக்க வழக்கங்கள் : மிக அதிகமாக சாப்பிடுவதாலும், உடலுக்கு போதிய இயக்கம் கொடுக்காமல் இருப்பதாலும் மட்டுமே உடல் எடை அதிகரித்து விடுவதில்லை. நமது வாழ்வியல் பழக்க வழக்கங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகை பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, முறையான தூக்கமின்மை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். அத்துடன் மன அழுத்தம் உருவாகும்.
முறையான இயக்கம் இல்லாமல் இருப்பது : உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், நாளொன்றுக்கு ஒருமுறை உடற்பயிற்சி செய்வது மட்டும் போதுமானது அல்ல. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பணி என்றாலும், அவ்வபோது எழுந்து நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை : உடலுக்கு போதுமான தண்ணீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவும். போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும், வழக்கத்தைவிட கூடுதலாக சாப்பிட நேரிடும். தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்கள் பசி கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற கூடுதல் உணவை சாப்பிடும் பழக்கம் தவிர்க்கப்படும்.