நாடு முழுவதும் கோவிட் தொற்றின் இரண்டாம் அலை நீடித்து வரும் நிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் போடப்பட்டுள்ள லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை கொரோனா தாக்கும் அதே நேரத்தில், புகையிலை பயன்பாடு மாற்று புகைப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்கள் உடையவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல நுரையீரல் தொடர்பான சிக்கல்களுக்கு புகைபிடித்தலே ஆபத்தான காரணியாக கூறப்படுகிறது. நுரையீரலை குறி வைத்து தாக்கும் வைரஸான கோவிட், ஏற்கனவே புகையிலை நுகர்வு பழக்கத்தால் பலவீனமாக இருக்கும் நுரையீரல்களை எளிதாக தாக்கும் வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் கொரோனா மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் மேற்கு நகரமான மீரட்டில் ஆயிரக்கணக்கானோர் கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மீரட் நகரில் 767 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இறந்தவர்களில் சுமார் 320 பேர் (42%) வழக்கமாக புகையிலை பொருட்களை எடுத்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள 320 பேர் சிகரெட் அல்லது வேறு வழிகளின் மூலம் புகையிலையை பயன்படுத்தியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
டாக்டர்களின் கூற்றுப்படி, புகைபிடித்தல் நேரடியாக நுரையீரலை பாதிக்கிறது மற்றும் உடலுக்குள் இருக்கும் பாதுகாப்பு அடுக்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான புகலிடத்தை தேடி அலையும் கோவிட் வைரஸ், புகைப்பிடிப்பவர்கள் அல்லது பிற புகையிலை பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்களின் உடலை தேர்வு செய்து உடனடியாகவும், மிக எளிதாகவும் பரவுகிறது. இதனால் மீரட் நகரில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கடும் நோய் அல்லது அபாயகரமான விளைவுகளை பெறுவதற்கான ஆபத்து அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிச்சயம் கோவிட்-19 மூன்றாவது அலை நாட்டை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், புகையிலை மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கோவிட்-19ன் மூன்றாவது அலைகளின் போது சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே தொற்று நோயின் அடுத்த அலையின் போது பேரழிவு தரும் விளைவுகளை தவிக்க விரைவில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு புகைபிடிக்கும் நபர்களை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவிட் 3-வது அலை இந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் வரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் அதன் தீவிரத்தன்மை குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை. இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் ஒட்டு மொத்தமாக புகைப்பிடிப்பவர்களில் பெரும் எண்ணிக்கையை இளைஞர்கள் உருவாக்கியுள்ளதால் மருத்துவர்களின் எச்சரிக்கை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.