உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குறித்து நம் எல்லோருக்கும் மிகுதியான விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், வாய் சுகாதாரம் குறித்து நாம் மறந்து விடுகிறோம். வாய் சுகாதாரத்திற்கு முறையான பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பதுடன், அவ்வபோது பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
அதிலும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் அதே சமயத்தில் வாய் சுகாதாரம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நம் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக, மிக அவசியமாகும். ஏனெனில் ஈறுகளில் ஏதேனும் பாதிப்பு என்றால், அது ஒட்டுமொத்தமாக பற்களை இழக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும்.
சிவந்த, வீங்கிய ஈறுகள் : உங்கள் ஈறுகள் சிவந்து காணப்படுவது, வீக்கத்துடன் இருப்பது அல்லது தொடும்போது இலகுவாக இருப்பது என்பதெல்லாம் ஈறு அழற்சிக்கான அறிகுறிகள் ஆகும். பற்களில் தொற்று மற்றும் பாக்டீரியா படிந்திருப்பதால் இதுபோன்று ஏற்படும். இதை தவிர்க்க தினசரி முறைப்படி பல் துலக்க வேண்டும். வேம்பு, அஷ்வகந்தா போன்றவை சேர்க்கப்பட்ட மூலிகை பேஸ்ட் பயன்படுத்துவது சிறப்பான பலன்களை தரும்.
ஈறுகளில் கசிவு : இது எல்லோருக்கும் பொதுவாக ஏற்படக் கூடிய பிரச்சினை ஆகும். நீங்கள் பல் துலக்கும்போது அல்லது வாய் கொப்பளிக்கும்போது ஈறுகளில் கசிவு ஏற்படுவதை உணர்ந்தீர்கள் என்றால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆய்வு செய்து, அவற்றை சுத்தம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இது மட்டுமல்லாமல் லவங்கம், வேம்பு, திரிபலா, மாதுளை போன்றவை அடங்கிய மூலிகை பேஸ்ட் பயன்படுத்தினால் அது ஈறு கசிவை தடுத்து, பற்களை பலப்படுத்தும்.
வாய் துர்நாற்றம் : நாம் உண்ணும் உணவுகள், அருந்தும் பானங்களுக்கு தகுந்தாற்போல வாயில் அவ்வபோது கெட்ட வாடை வருவது இயல்பானது தான். ஆனால், யாரும் நெருங்க முடியாதபடி துர்நாற்றம் வீசுவது, நீடித்த வாடை, வாய்வழியே சுவாசிக்கும்போது கெட்ட வாடை தென்படுவது என்பதால் வாயில் பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன என்பதற்கான அர்த்தம் ஆகும். உணவுக் குழாயில் புண் இருந்தாலும் இதுபோன்ற வாடை ஏற்படும். ஆகவே, இதை உரிய முறையில் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.