பெண்களின் ஆரோக்கியம் என்று வரும் பொழுது அந்தரங்க பகுதியான பிறப்புறுப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். மிகவும் சென்சிட்டிவான பகுதிகளில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றங்கள் கூட உடலில் ஏதேனும் பிரச்சனை இருப்பதை குறிக்கலாம். உதாரணமாக வெள்ளைப்படுதல் அல்லது பிறப்புறுப்பில் எரிச்சல் ஆகியவற்றை கூறலாம். பெங்களூருவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவம், மூத்த ஆலோசகராக பணியாற்றும் டாக்டர் ரூபினா ஷனவாஸ் பெண்களின் அந்தரங்கப்பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருப்பதை குறிக்கும் அறிகுறிகள் பற்றி பகிர்ந்துள்ளார்.
அரிப்பு : இது பிறப்புறுப்பின் வெளிப்புறமாக (வுல்வா என்று அழைக்கப்படும் பகுதி) அல்லது உட்புறமாக (யோனி) இருக்கலாம். இது வெளிப்புறத்தில் ஏற்பட்டால், ஒவ்வாமையை ஏதேனும் இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். அலர்ஜியால் அரிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தால், அது வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றாக இருக்கலாம். பிறப்புறுப்புக்குள் அரிப்பு என்பது பொதுவாக ஈஸ்ட் தொற்றால் ஏற்படுகிறது. குறிப்பாக அடர்த்தியான வெள்ளை நிறத்தில் திரவம் வெளியேறுவது ஈஸ்ட் தொற்று என்பதைக் குறிக்கிறது.
சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை : இதுவும் பொதுவாக சிறுநீர் தொற்று காரணமாக ஏற்படலாம். நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், இது உங்கள் சிறுநீர் பாதையில் இருக்கும் தசைகள் பலவீனம் அடைந்தாலோ அல்லது சிறுநீர்ப்பையின் அதிகப்படியான செயல்பாடு காரணமாக சிறுநீர் எதிர்பாராதவிதமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெளியேறும்.
வஜைனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது வலி / எரிச்சல் : மாதவிடாய் அல்லது ஓவிலேஷன் நாட்களின் போது, தெளிவான அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் டிஸ்சார்ஜ் இயல்பானது. டிஸ்சார்ஜ் ஆகும் திரவத்தின் நிறத்தில் மஞ்சள், பச்சை அல்லது அடர்த்தியான வெள்ளை காணப்பட்டாலோ மற்றும் துர்நாற்றம் அல்லது அரிப்புடன் வெளியேற்றம் ஆனாலோ, அது தொற்றைக் குறிக்கும். தொடர்ந்து அதிகப்படியான வெள்ளை வெளியேற்றமும் கவனிக்கப்பட வேண்டும்.
பிறப்புறுப்பின் மேற்பகுதி / பக்கவாட்டுப் பகுதிகளில் கட்டி : ஷேவிங் அல்லது முடி அகற்றும் பொருட்களின் பக்க விளைவுகளாக தோலில் சின்ன சின்ன புடைப்புகள் ஏற்படலாம். கட்டிகள் தெளிவாகவும் திரவமாகவும் இருந்தால், எரிச்சல் உணர்வு ஏற்படும். சில நேரங்களில், பிறப்புறுப்பில் கட்டிகள் ஹெர்பெஸ் நோய்த்தொற்றாக இருக்கலாம். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்பாராத இரத்தப்போக்கு : உங்கள் மாதவிடாய் நாட்கள் இல்லாமல், வேறு நாட்களில் ஏற்படும் இரத்தப்போக்கு அசாதாரணமானது. இது சாதாரண நாட்களில் ஏற்படலாம் அல்லது உடலுறவுக்குப் பிறகு ஏற்படலாம். மேலும், சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படக்கூடும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், சரியான காரணத்தைக் கண்டறிய மகளிர் மருத்துவ பரிசோதனை அவசியம்.
பிறப்புறுப்பில் வறட்சி : உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்புப் பகுதியில் வறட்சி ஏற்பட்டால், அடிப்படையாக லூப்ரிகேஷன் குறைபாடு காரணமாக இருக்கலாம். சில பெங்களிக்கு, நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாத வஜைனல் தொற்றும் வறட்சிக்கு வழிவகுக்கும். இது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்பட்டால், இது ஹார்மோன் குறைபாட்டின் விளைவாக இருக்கலாம்.
பிறப்புறுப்பில் இருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போன்ற உணர்வு: இடுப்புப் பகுதிகளின் தசைகள் பலவீனமடைவதால், கருப்பை, சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் கீழே இறங்குவதால், யோனியில் இருந்து ஏதேனும் திரவம் வெளியேறுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது சிறுநீர் அல்லது மலம் கழிப்பதிலும் சிக்கலை உண்டாக்குகிறது.