சிறுநீரக பாதிப்பு என்பது இன்று பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வயதானவர்களை குறி வைத்த இந்த நோய் இளைஞர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. இப்படி சிறுநீரக பிரச்சனை அதிகரிக்க அதன் அறிகுறிகளில்லா பாதிப்பே காரணம். ஆம்.. பொதுவாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதன் அறிகுறிகள் தெரியாது. அது தீவிர நிலையை அடைந்த பின்பே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். எனவேதான் இது நாள்பட்ட சிகிச்சை எடுக்கும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. இருப்பினும் சில அறிகுறிகளை நீங்கள் உணர்கிறீர்கள் எனில் ஆரம்ப நிலையிலேயே முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகுங்கள். அப்படி இந்த 10 அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்கவும்.
அதீத சோர்வு மற்றும் கவனமின்மை : சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் தோய்வு ஏற்படும்போது உடலின் நச்சுக்கள் மற்றும் அசுத்தங்கள் இருப்பின் அது சுத்தீகரிக்கப்படாமல் இரத்தத்தில் கலந்துவிடும். இதனால் அனீமியா ஏற்பட்டு நீங்கள் எப்போதும் அதீத சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வீர்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
தூங்குவதில் சிரமம் : சிறுநீரகம் நச்சுக்களை சரியாக வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றாமல் இரத்தத்தில் தேங்கும்போது தூக்கத்தையும் பாதிக்கும். அதோடு இது உடல் பருமன் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். அப்படி சிறுநீரக நோய் ஏற்பட்டால் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையும் இருக்கும். இது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் பொதுவான பிரச்சனையாகவும் உள்ளது.
வறண்ட மற்றும் அரிக்கும் சருமம் : உடலின் தேவையற்ற நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுவதுதான் ஆரோக்கியமான சிறுநீரகத்தின் வேலை. இந்த வேலை சரியாக நடந்தால் இரத்த சிவப்பணுக்கள் புதிதாக உருவாகும். எலும்பு ஆரோக்கியம் மேம்படும். அதோடு உடலின் மினரல் சத்துக்களின் தேக்கம் சீராக இருக்கும். இப்படி எதுவும் சரியான முறையில் நடக்காத போது அதன் எச்சரிக்கையாக சருமம் வறட்சியாவது, அரிப்பு மற்றும் சரும எரிச்சல் ஏற்படும். எலும்பு பாதிப்பு இருக்கும். அதோடு சிறுநீரக பாதிப்பு நீண்ட நாட்கள் இருப்பின் சரியான முறையில் ஊட்டச்சத்துக்களையும், மினரலையும் சமன் செய்ய முடியாமல் போகும்.
வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு : நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்கள் அதுவும் இரவில் அதிகமாக சிறுநீர் கழிக்க தோன்றுகிறது எனில் அது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தின் வடிகட்டும் செயல் தடைப்படும்போது அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு தோன்றும். சில நேரங்களில் சிறுநீரக தொற்று ஏற்பட்டிருதாலும் இவ்வாறு தோன்றும்.
சிறுநீரில் இரத்தம் கசிதல் : ஆரோக்கியமான சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை மட்டும் சுத்தம் செய்து இரத்த செல்களை பாதுகாக்கும். பின் அந்த நச்சுக்களை மட்டும் சிறுநீர் வழியாக வெளியேற்றும். ஆனால் சிறுநீரகத்தில் வடிகட்டும் செயல் தடைப்படும்போது சிறுநீர் வழியாக இரத்த செல்களையும் கசியச் செய்யும். அப்படி நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் வருவதுபோல் தென்பட்டால் எச்சரிக்கையாக உடனே மருத்துவரை அணுகவும். இது சிறுநீரக புற்றுநோய் , சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரக தொற்று பாதிப்பு இருந்தால் சிறுநீரில் இரத்தம் வரும்.