சியா விதைகள் இல்லாமல் ஒரு கோடை காலத்தை கடப்பது கடினம். சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். இது மட்டுமல்லாமல் சாலட் தயாரிக்கும்போது சியா விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதை எப்படி உபயோகித்தாலும் முதலில் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய எக்கசக்க சத்துக்கள் உள்ளது. சியா விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடல் செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை ஆதரிக்கிறது. சியா விதைகளின் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
இதய நோய் ஆபத்துகளை குறைக்கும் : தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. அதுமட்டும் அல்ல, உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.
உடல் உஷ்ணத்தை தீர்க்கும் : கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை எடுத்துக் கொண்டால் வாதம், பித்தம் குறையும். மேலும், உடலில் கபம் (நீர்ச்சத்து) அதிகரிக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.