இன்று உணவு என்பதை விட ருசி மீதான மோகம் தான் அதிகரித்துள்ளது. அதன்விளைவு தான் நோய்கள் அதிகரிப்பிற்குக் காரணம். எனவே ஆரோக்கியமான அதேசமயம் பாதுகாப்பான உணவை மக்கள் சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி...உணவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வொரு ஜூன் 7 அன்று உணவுப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்க அறிவித்தது. எனவே இந்நாளிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எந்த மாதிரியான உணவுப் பழக்கம் அவசியம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள் : அதாவது எண்ணெய்யில் பொறித்து பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளான குக்கீஸ் மற்றும் சிப்ஸ் வகைகள் போன்றவற்றை முற்றிலுமாகத் தவிருங்கள். அதற்கு பதிலாக ஆர்கானிக் உணவு, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் , நட்ஸ் எண்ணெய் போன்ற எண்ணெய்யை தினசரி உணவு சமைக்கப் பயன்படுத்துங்கள்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள் : ஒமேகா 3 இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய கொழுப்பு அமிலமாகும். எனவே மீன் வகைகள், முட்டை, புரக்கோலி, நட்ஸ் வகைகள். ஆலிவ் எண்ணெய் என அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். தினசரி உணவோடு கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள்.
டையட் சோடா மற்றும் குளிர்பாணங்களைத் தவிருங்கள் : டையட் சோடா மற்றும் இதர குளிர்பானங்கள் சர்க்கரையின் தேக்கத்தை அதிகமாகக் கொண்டிருப்பதை பல ஆய்வுகள் கண்டறிந்து எச்சரித்து வருகின்றன. எனவே அதிக சர்க்கரை நீரழிவு நோய், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கலாம். எனவே அவற்றைத் தவிர்த்து வீட்டிலேயே பழம் மற்றும் காய்கறியில் ஜூஸ் போட்டு குடியுங்கள். அப்படியே சாப்பிடுவது மேலும் சிறப்பு.