ஆரஞ்சுபழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதன் புளிப்பான மற்றும் இனிப்பு சுவை மீண்டும் மீண்டும் ருசிக்கத் தூண்டும். மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம். ஆரஞ்சு நம்மை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. அதேபோல, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வைட்டமின் சி சக்தியை ஏராளமாக வழங்குகிறது. ஆனால் அதிகப்படியாக ஆரஞ்சுபழங்கள் சாப்பிடுவது ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக காண்போம்.
பொதுவாக 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 47 கிராம் கலோரிகள், 87 கிராம் தண்ணீர், 0.9 கிராம் புரதம், 11.8 கிராம் கார்போஹைட்ரேட், 9.4 கிராம் சர்க்கரை, 2.4 கிராம் நார்ச்சத்து மற்றும் 76 சதவிகிதம் வைட்டமின் சி உள்ளது. தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. ஆரஞ்சுபழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்றாலும் அவற்றை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.
அதிகமாக ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவு?ஒருவர் தினமும் 4 முதல் 5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட ஆரம்பித்தால், அது அவர்களை நார்ச்சத்து உணவுகளை அதிகமாக உட்கொள்ள வழிவகுக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும் என்று சில அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை ஆரஞ்சு சாப்பிடலாம்?ஆரஞ்சுகள் அமிலத்தன்மை கொண்டவை. இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். GERD நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரஞ்சு சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் சில கடுமையான சந்தர்ப்பங்களில், வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
அதிக பொட்டாசியம் அளவு உள்ளவர்கள் ஆரஞ்சு சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஆரஞ்சுகளில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. ஆனால் உடலில் ஏற்கனவே அதிகப்படியான பொட்டாசியம் இருந்தால், அது ஹைபர்கேமியா எனப்படும் தீவிரமான நிலையை ஏற்படுத்தும். எனவே அதிகப்பட்சமாக, ஒரு நாளில் 1 அல்லது 2 ஆரஞ்சுகளுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.