பொதுவாக காய்கறிகளை போலவே தினசரி நிறைய பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து. ஏனென்றால் நல்ல ஃபிரெஷ்ஷான பழங்களில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. பெரும்பாலான பழங்களில் இயற்கையாகவே கொழுப்பு, சோடியம் மற்றும் கலோரிகள் குறைவாக காணப்படுகின்றன. தவிர மக்களுக்கு போதுமான அளவு கிடைக்காத பொட்டாசியம், டயட்ரி ஃபைபர், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்களாக பழங்கள் உள்ளன.
நாளொன்றுக்கு இரண்டு முறை பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக மற்றும் ஃபிட்டாக வைத்திருக்க பெரிதும் உதவும். எனினும் நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்து அதிகபட்ச நன்மைகளை பெற குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்றார் வரையறை இருப்பது போலவே, பழங்களுக்கும் இருக்கின்றன. இது தொடர்பாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை விரிவாக பார்க்கலாம். பழங்களிலிருந்து நாம் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளை பெற அவற்றை மாலை சூரியன் மறைவதற்குள் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
பண்டைய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேத முறைப்படி, மாலை சூரியன் மறைந்த பிறகு நாம் பழங்களை சாப்பிடுவது நமது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உடலின் ஜீரண மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்தி செரிமான செயல்முறையை சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது. நாம் சாப்பிடும் பெரும்பாலான பழங்களில் குறைவான அளவே கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. இவை உடனடி ஆற்றலின் சிறந்த ஆதாரமாகும் என்றாலும் கூடவே ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன.
சூரியன் மறைந்த பிறகு குறிப்பாக இரவு நேரங்களில் நாம் பழங்களை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த கூடும். இது தவிர சூரிய அஸ்தமனத்திற்கு பின் நமது வளர்சிதை மாற்றம் குறையும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எளிதில் ஜீரணிக்க முடியாது. எனவே சூரியன் மறைந்த பிறகு பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஆயுர்வேத நிபுணர்களின் கருத்து.
லைஃப் ஸ்டைல் மற்றும் வெல்னஸ் பயிற்சியாளர் லூக் குடின்ஹோ (Luke Coutinho) கூற்றுப்படி, காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவது சிறந்தது. இரவில் சுமார் 10 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் தூங்கி எழுந்த பிறகு வெறும் வயிற்றில் ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனென்றால் காலையிலேயே ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவது நம் உடல் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற உதவும். குறைவான கார்போஹைட்ரேட்டுகளை காலை மற்றும் உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உட்கொள்வதும் நல்லது என்றும் கூறுகிறார் லூக்.
காலை மட்டுமல்ல பழங்களை எப்போது சாப்பிட்டாலும் தனியாகவே சாப்பிட வேண்டும். பால் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களை சாப்பிடும் போது அது உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தி தீமை விளைவிக்க கூடும். எனவே பழங்கள் ஆரோக்கியமானவை, சத்தானவை, இயற்கையான இனிப்பு சுவையுடையவை என்றாலும் பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.