கடைகளுக்கு சென்று பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது, அந்த பேக்கெட்டின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் என்றாவது படித்து பார்த்ததுண்டா? இன்றைய அவசர உலகில் தேவையான பல விஷயங்களை செய்ய நாம் மறந்துவிடுகிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த ஒரு பொருளை வாங்கும்போதும் அதன் நியூட்டிரிஷன் லேபிள் (Nutrition label) என்று சொல்லப்படும் ஊட்டச்சத்து சார்ந்த தகவல்களை படித்து தெரிந்து கொள்வது நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற தெளிவான விவரத்தை நமக்கு கொடுக்க உதவும்.
நியூட்டிரிஷன் லேபிளிங் என்றால் என்ன? உலக சுகாதார அமைப்பின்படி, "நியூட்ரிஷன் லேபிளிங் என்பது பேக்கேஜ் செய்யப்பட்ட எந்த ஒரு உணவுப் பொருளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சில ஊட்டச்சத்து குறித்த விவரங்கள் மற்றும் கூடுதல் ஊட்டச்சத்து தகவல்கள் ஆகும். இதில் ஃப்ரண்ட்-ஆஃப்-பேக் லேபிளிங் (FOPL) அடங்கும். சிறந்த நியூட்டிரிஷன் லேபிளிங் என்பது FOPL இருப்பு மூலமாக கண்டறியப்படுகிறது. இது பல நாடுகளில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அடையாளம் காண பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது."
நியூட்டிரிஷன் லேபிளிங் மூலமாக நாம் என்னென்ன ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை எளிதாக கவனித்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் பாதுகாப்பான உணவுத் தேர்வுகளை செய்யவும் இது உதவி புரிகிறது. அதோடு ஆரோக்கியமான பழக்கத்தை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பேக்கேஜை திருப்பி லேபிளை படிக்க ஒரு சில வினாடிகளே ஆகும் என்றாலும் கூட, இந்த ஒரு சிறிய முயற்சியானது நமது ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
உணவுத் துறையானது பார்ப்பவரை கவரும் வகையில் மார்கெட்டிங் செய்து பொருட்களை விற்பனை செய்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெளிப்புற தோற்றம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதன் ஊட்டச்சத்து விவரம் என்னவென்று கூட பாராமல் அதனை உடனடியாக வாங்கி விடுகிறோம். அப்படி இருக்க பேக்கேஜ் செய்யப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? ஒரு பேக்கேஜின் முன்புறம், பக்கவாட்டு பகுதி மற்றும் பின்புறம் உணவு குறித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விவரமே ஃபுட் லேபிளிங் ஆகும்.
"நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள ஃபுட் லேபிளை படித்து புரிந்து கொள்வது அவசியம். கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது மட்டுமே ஆரோக்கியம் என்று கருதப்படாது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சாப்பிடுவதும் முக்கியம். ஆகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்." என்று மேகனா பாசி, மை தாலி, ஆரோக்கியா வொர்ல்டு ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.
நாம் ஏன் பேக்கேஜ்களின் பின்புறத்தை கவனிக்க வேண்டும்?"பொதுவாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதனை முழுமையாக தவிர்க்க முடியாது. ஏனெனில், பல ஆரோக்கியமான பண்டங்களும் தற்போது பேக்கேஜ் வடிவில் கிடைக்கின்றன. ஆகவே, அவை பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு என்ற ஒரே காரணத்திற்காக அது ஆரோக்கியமற்றது என்று கூறிவிட முடியாது." என்று முக்தா பிரதான், செயல்பாட்டு ஊட்டச்சத்து நிபுணர், சிஇஓ மற்றும் ஃபௌண்டர், ஐதிரைவ் கூறுகிறார்.
ஆகையால் எந்த ஒரு பேக்கேஜ் செய்யப்பட்ட பொருளை வாங்கினாலும், அதன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் 'ஆர்கானிக்' என்று கொடுக்கப்பட்டுள்ளதால் மட்டுமே ஒரு பொருள் ஆர்கானிக் ஆகி விடாது. அதற்கான தகுந்த சான்றிதழ் உள்ளதா என்பதை கவனியுங்கள். நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு 5% ஆகும். பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமானவை. கெமிக்கல் பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் அன்நேச்சுரல் அடிடிவ்ஸ் மற்றும் கலர்களை தவிர்ப்பது நல்லது. அதோடு சர்க்கரை மற்றும் உப்பு அல்லாத பண்டங்களை தேர்வு செய்யுங்கள்.