நான்கு வீடுகளுக்கு தள்ளியுள்ள வீட்டில் மீன் பொறித்தாலும் அந்த வாசம் நம் மூக்கை சுண்டி இழுக்கும். இப்போதே நாமும் மீன் சாப்பிட்டு விட வேண்டும் என்ற ஏக்கத்தை வரவழைக்கும். அதுவும் நம் வீட்டில் மீன் பொறிக்கிறார்கள் என்றால், சொல்லவே வேண்டாம். பொறித்து எடுத்து, தட்டுக்கு வரும் முன்னே நம் கைகள் தாளம் தட்ட தொடங்கிவிடும்.
சரி, இவ்வளவு ஆசையை தூண்டுகின்ற மீனை பொறிப்பதற்கு என்ன மசாலா பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? நீங்கள் யூ டியூப், ரீல்ஸ் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள். மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரகத் தூள், உப்பு, மிளகுத் தூள், இஞ்சி - பூண்டு பேஸ்ட், கார்ன் பிளவர் மாவு என வகை, வகையாக அடுக்கிக் கொண்டே போவார்கள். அதெல்லாம் தொழில் நேர்த்திக்காக செய்யப்படும் விஷயங்கள்.
அம்மா தேர்வு செய்யும் மசாலா : உண்மையில், அம்மா பக்குவத்தில் பொறிக்கப்படும் மீனுக்கு என்ன சேர்க்கப்படுகிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இந்த மூன்று மட்டுமே மீன் மசாலாவுக்கு போதுமானது. கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்றால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பும், மஞ்சளும் ஏன் ? மஞ்சளில் பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்பு உள்ளது. இதனால் கிருமிகள் மற்றும் தொற்றுகளை விரட்டியடிக்கும். இது மட்டுமல்லாமல் உப்பும், மஞ்சளும் சேர்த்து மேரினேட் செய்யப்படுவதால் மீன் மீது நுண்ணுயிர்கள் பெருகுவது தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் உப்பு சேர்க்கப்படுவதால், புரதச்சத்து மிகுந்த மீன் இலகுவானதாக மாறுகிறது. ஆக சாப்பிடும்போது மீன் மென்மையாக மாறுகிறது.
மீன் பொறிப்பதற்கான டிப்ஸ் : நீங்கள் பெரிய மீனை வாங்கி சிறு, சிறு துண்டுகளாக வெட்டி வாங்கியிருப்பின் மேரினேட் செய்யும்போது அதில் மசாலா எளிதில் ஒட்டிக் கொள்ளும். அதுவே நடுத்தர அளவில் உள்ள முழு மீனாக பொறிப்பதற்கு எடுத்துக் கொண்டால், அந்த மீனில் கத்தியை வைத்து கீறி விட்டுக் கொள்ளவும். இதனால், உப்பு மற்றும் மிளகாய் தூள் நன்றாக சேரும்.