இனிப்பு சாப்பிடும் பழக்கம் நம் பிறவியிலேயே ஒட்டிக் கொள்வது ஆகும். நீரிழிவு குறைபாடு வந்தாலும் கூட, இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை கட்டுப்படுத்துவது கடினம். குறிப்பாக, இனிப்பு இல்லாமல் பலருக்கு சாப்பாடு என்பதே முழுமை அடையாது. உணவுடன் இனிப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த உணவு மனப்பூர்வமானதாக, முழுமையானதாக இருக்கும். குறிப்பாக இனிப்பு சாப்பிடுவது நம் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆம், இனிப்பு சாப்பிடுகையில் மூளையில் சுரக்கும் டோபமைன் என்னும் வேதிப் பொருளானது நமது மகிழ்ச்சி உணர்வை தூண்டுகிறது. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் இனிப்புச் சுவைக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர்.
உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடலாமா? என்னதான் இனிப்புச் சுவை எல்லோருக்கும் பிடித்தமானது என்றாலும் கூட உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், சாப்பிட்ட பிறகு இனிப்பு எடுத்துக் கொள்வது நமது உடல் நலனை பெரிய அளவில் பாதிக்குமாம். குறிப்பாக, இனிப்பை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடல் பருமன், அதிக ரத்த உராய்வு, எரிச்சல் மற்றும் இதய நோய் பாதிப்புகளை கூட கொண்டு வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் தொடர்ச்சியாக இனிப்பு சாப்பிடும் பட்சத்தில், அவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லது: உடல் நலன் தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை தருவதாக ஆயுர்வேத மருத்துவம் இருக்கிறது. நீங்கள் உணவுக்கு பிறகு இனிப்பு சாப்பிடுவதைக் காட்டிலும், உணவுக்கு முன்பாக இனிப்பு சாப்பிடுவது நல்லது என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. உணவுக்கு முன்பாக இனிப்பு சாப்பிடும்போது உடலில் செரிமாணத்திற்கு தேவையான என்சைம்களை அது தூண்டி விடுகிறது. இதனால், நாம் சாப்பிடும் உணவு எளிதாக செரிமானம் அடைகிறது. அதுவே உணவுக்குப் பிறகு இனிப்பு எடுத்துக் கொண்டீர்கள் என்றால், செரிமானத்தை அது பாதிக்கிறது.
உணவின் சுவையை உணரலாம் : உணவுக்கு முன்பாக இனிப்பு சாப்பிட்டால், நாவில் சுவையை உணரும் சுரப்பிகளை அது தூண்டுகிறது. இதனால், நீங்கள் சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட இயலும். உணவுக்கு இறுதியில் இனிப்பை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வாயுத் தொல்லை, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.
ஆரோக்கியமான இனிப்புகள் : என்னதான், இனிப்புச் சுவை நமக்கு பிடித்தமானதாகவும், உடலுக்கு தேவையானதாகவும் இருந்தாலும் கூட, செயற்கையாக தயாரிக்கப்பட்ட, நிறைவூட்டப்பட்ட இனிப்பு வகைகளை நாம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பேக்கரி ஸ்வீட்களை தவிர்த்துக் கொண்டு பேரீட்சை பழம், சப்போட்டா போன்ற இனிப்பு சுவை கொண்ட இயற்கையான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக புரதம், கால்சியம் போன்ற சத்துகளும் நமக்கு கிடைக்கும்.