உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய முட்டைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் முட்டைக்கு மனம் மயங்காத ஆட்கள் இருக்க முடியாது. இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை தவிர்ப்பவர்கள் கூட, ‘எக்கீடேரியன்’ (முட்டை மட்டும் சாப்பிடுபவர்) என வலம் வருவது உண்டு.
வீடுகளில் பெரும்பாலும் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே முட்டை சமைக்கப்படும். ஆக, நாம் எடுத்துக் கொள்ளும் முட்டையின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். அதே சமயம், தினசரி வெளியே ஹோட்டல்களில் சாப்பிடும் பெரும்பாலான நபர்கள் தினசரி முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக, பேச்சிலர்களின் மதிய உணவு மற்றும் இரவு உணவு வேளைகளில் ஆம்லெட் அல்லது ஆஃப் பாயில் இல்லாமல் சாப்பாடு முழுமை அடையாது. இப்படி தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்தச் செய்தியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
முழு எனர்ஜி கிடைக்கும் : காலை உணவில் முட்டை எடுத்துக் கொண்டால், அன்றைய நாளில் உங்கள் உடலுக்கு தேவையான எனர்ஜி முழுமையாக கிடைக்கும். குறிப்பாக, நீண்ட நேரம் பணி செய்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். முட்டைகள் எப்போதும் ஆற்றலை மெல்ல, மெல்ல ரிலீஸ் செய்யும். இதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை செரிமானத்தை தாமதப்படுத்தும். ஆக, பசியின்றி நீண்ட நேரம் பணி செய்யலாம்.
உடல் எடை குறைக்க உதவும் : உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் முட்டையில் இருந்து கிடைத்து விடுவதால், மாவுச்சத்து உணவுகளை நீங்கள் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். மேலும், முட்டை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு எளிதில் கிடைக்கும். இதனால், மற்ற உணவு அளவுகள் குறையும் என்ற நிலையில், எடையை குறைக்க இது உதவும்.
எத்தனை முட்டை சாப்பிடலாம் : முட்டை நல்லது என்றாலும் எத்தனை சாப்பிடலாம் அல்லது தினசரி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதய நோய் பாதிப்புகள் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லாவிட்டால் தினசரி முட்டை சாப்பிடலாம். அதே சமயம், அவரவர் உடல் தேவையைப் பொருத்து ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது.