உடல் எடையை குறைப்பில் புரோட்டின் நல்ல பலன்களை கொடுக்கும் என்பது பலரும் அறிந்த விஷயம். சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பன்னீர் மூலமாகவும், அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு முட்டை அல்லது பன்னீர் என இரண்டு புரோட்டின் சத்து நிறைந்த உணவு உடல் எடை குறைப்பிற்கான பட்டியலில் உள்ளன. உடல் எடை குறைப்பு ரேஸில் எது சிறந்தது முட்டையா? பன்னீரா? என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்..
உடல் எடையை குறைக்க விரும்புவோர் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்து தசைகளின் வலிமையை கூட்ட முயற்சிப்பவர்களுக்கும் புரத சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியம். இதில் சமைக்க எளிதான, மற்றும் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த பன்னீர் மற்றும் முட்டை இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறப்பாகவும், ஆரோக்கியமான முறையிலும் செயல்படுகிறது என்பது நீண்ட கால விவாதமாக இருந்து வருகிறது.
முட்டை: ஆரோக்கியமான டயட் உணவை உட்கொள்ள திட்டமிடும் அனைவரது முதல் ஆசையும் அதன் விலை பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். அந்த வகையில் பன்னீரோடு ஒப்பிட்டால் முட்டையின் விலை மிகவும் மலிவானது. அனைத்து தரப்பு மக்களாலும் அதனை வாங்க முடியும் என்பதோடு, நீண்ட நாட்களுக்கு எளிதில் சேமிப்பது வைக்கவும் முடியும். மேலும் சமைக்கும் விஷயத்திலும் முட்டை மிகவும் எளிதான ஒன்று. அதேபோல் வேகவைத்த முட்டை, ஆம்லெட், முட்டை கிரேவி என பலவையான உணவுகளை சில நிமிடங்களில் தயார் செய்துவிட முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஒரு முழு முட்டையில் 6 கிராம் புரதம் மற்றும் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
44 கிராம் எடையுள்ள ஒரு வேகவைத்த முட்டையை எடுத்துக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொண்டால். அதில், 5.5 கிராம் புரோட்டின், 4.2 கிராம் கொழுப்பு , 24.6 மில்லி கிராம் கால்சியம், 0.8 மில்லி கிராம் இரும்புச்சத்து, 5.3 மில்லி கிராம் மெக்னீசியம், 86.7 மில்லி கிராம் பாஸ்பரஸ், 60.3 மில்லி கிராம் பொட்டாசியம், 0.6 மில்லி கிராம் துத்தநாகம், 162 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மற்றும் 13.4 மைக்ரோகிராம்கள் செலினியம் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
பன்னீர் : பன்னீர் எனப்படும் பாலாடைக் கட்டி, இந்தியர்களின் உணவில் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. நீர் கலக்காத கெட்டிப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொதிக்கவிட்டு, அவை திரிய ஆரம்பிக்கும் போது அதனை சுத்தமான முறையில் வடிகட்டினால், மீதம் இருக்கும் மிருதுவான பொருள் தான் பன்னீர் என அழைக்கப்படுகிறது. பன்னீரில் அதிகப்படியான கால்சியம், வைட்டமின் பி12, செலினியம், வைட்டமின் டி மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
40 கிராம் குறைந்த கொழுப்புள்ள பன்னீரை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு 7.54 கிராம் புரோட்டின், 5.88 கிராம் கொழுப்பு, 4.96 கிராம் கார்போஹைட்ரேட், 7.32 மைக்ரோகிராம் ஃபோலேட்டு, 190.4 மில்லி கிராம் கால்சியம், 132 மில்லி கிராம் பாஸ்பரஸ், 50 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. பன்னீரையும் சாலட், சாண்ட்விச், கிரேவி என பலவகையில் சமைத்து உண்ணலாம்.
முட்டை Vs பன்னீர் எது சிறந்தது? முட்டை மற்றும் பன்னீர் இரண்டையும் பொறுத்தவரை ஒரே மாதிரியான சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது என்பதால், உடல் எடை குறைப்பிற்கான டயட்டில், ஒரு நாள் முட்டையையும், மற்றொரு நாள் பன்னீரையும் உட்கொள்ளலாம். அதே சமயம் சைவ பிரியர்களுக்கு உடல் எடை குறைப்பிற்கான டயட்டில் பன்னீர் இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். இவற்றுடன் சோயா பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக உணவில் அதிக ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.