நம் உடல்நலனை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்று உடற்பயிற்சி செய்வது ஆகும். ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக ஊட்டச்சத்து மிகுந்த சில உணவுகளை எடுத்துக் கொள்வது இன்னும் கூடுதல் பலன்களை தருவதாக அமையும். உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் சத்தான உணவுகள் அவசியமாகும்.
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வலுவான தசைகளை கட்டமைக்க உதவும். மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள், கழிவுகள் வெளியேற உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்நீத் பாத்ரா குறிப்பிட்டுள்ள செய்தியில், “நீண்ட காலத்திற்கு வலுவானவராக இருக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சிக்கு முன்னதாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஸ்மூத்தி : உடலைப் புத்துணர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று தான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் விருப்பமான பழங்களை தனித்தனியாகவோ அல்லது அவை அனைத்தையும் சேர்த்தோ ஸ்மூத்தி செய்யலாம். ஸ்மூத்தி எடை இழப்புக்கு ஒரு சிறந்த வழி, ஆனால் அவை உணவு அல்லது சிற்றுண்டி மாற்றாகப் பயன்படுத்தப்படுவதற்கு போதுமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே பழங்கள் மற்றும் சர்க்கரைகளை அதிகளவு சேர்க்க கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஸ்மூத்தியில் ஏராளமான புரதங்கள், ஃபைபர், நிறைவுறா கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
உருளைக்கிழங்கு : தினசரி காலைப் பொழுதில் வேக வைத்த முழு உருளைக்கிழங்கு ஒன்றை சாப்பிட்டு வரலாம். மாவுச்சத்து நிறைந்த இந்த உணவுப் பொருளானது, பயிற்சியின்போது நமக்கு தேவையான ஆற்றலை கொஞ்சம், கொஞ்சமாக வழங்கிக் கொண்டிருக்கும். சத்தானது என்று சொல்லிவிட்ட காரணத்தால் உருளைக்கிழங்கை பொறித்து சாப்பிடக் கூடாது.
பிளாக் காஃபி : நமக்கு எப்போதுமே சோர்வுகளில் இருந்து உற்சாகம் தரக் கூடிய பானங்களில் ஒன்றான பிளாக் காஃபி அருந்துவது சிறப்பான பலனை தரும். உடற்பயிற்சி முன்னர் ஒரு கப் அளவு பிளாக் காஃபி அருந்திவிட்டு சென்றீர்கள் என்றால் உங்கள் பயிற்சிக்கு தேவையான வலு, ஆற்றல், நீடித்த செயல்திறன் உள்ளிட்டவை கிடைக்கும். உடற்பயிற்சியின்போது நாம் இழக்கும் எலக்ட்ரோலைட்டுகளை ஈடுகட்ட இது உதவியாக இருக்கும்.
வேர்க்கடலை மற்றும் முழு தானிய பிரட் : நம் தசைகளை வலுவாக்க புரதச்சத்து அவசியமானது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். புரதச்சத்து அபரிமிதமாக கிடைக்க வேர்க்கடலை உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. முழு தானிய பிரட் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு மாவுச்சத்து கிடைக்கும். உடற்பயிற்சியின்போது நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும், தொடர்ந்து பயிற்சிகளை செய்வதற்கான நீடித்த ஆற்றல் கிடைக்கவும் இந்த வகை உணவுகளை தினசரி சுழற்சி முறையில் எடுத்துக் கொள்ளலாம்.