குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும், நம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் இருக்கிறது. அற்புத மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும். சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி மற்றும் பல சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் எடுத்து கொள்வது சிறந்த வழி. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த என பல வகையிலும் உதவுகிறது மஞ்சள் பால். இந்த மஞ்சள் பாலின் வேறு சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்...
பாலில் மஞ்சள் சேர்ப்பது எப்படி உதவுகிறது : பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் குர்குமின் நமது உடலின் கொழுப்பு மற்றும் திசுக்களில் உறிஞ்சப்படுவதால், அது உடலுக்கு நன்மை பயக்கிறது. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கும் போது பால் உடலுக்கு ஒரு மென்மையான ஊடகமாக மாறுகிறது, இதன் மூலம் குர்குமின் சிறப்பாகவும் வேகமாகவும் கொழுப்புகள் மற்றும் திசுக்களால் எளிதாக உறிஞ்சப்படுகிறது. எனினும் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளுக்கு மேல் சேர்க்க கூடாது என்பது நிபுணர்களின் எச்சரிக்கை.
மஞ்சள் பாலின் ஆரோக்கிய நன்மைகள்: கேன்சர் வராமல் தடுக்கும்: மஞ்சளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்க மெட்டாஸ்டேடிக் நோய் பரவுவதை தடுக்க மஞ்சள் கலந்த பால் உதவும். கேன்சருக்காக கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிகிச்சையின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் மஞ்சள் பால் உதவும்.
சளி மற்றும் இருமலை குணப்படுத்த: மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது. பாலில் மஞ்சள் சேர்ப்பது தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. தினமும் மஞ்சள் பால் குடித்தால் சளி தொந்தரவை எதிர்த்து போராடலாம்.
முதுமையை தடுக்கும்: நம் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆன்டி-ஏஜிங் எலிமென்ட்ஸ்களை மஞ்சள் கொண்டுள்ளது. தவிர மஞ்சள் பாலில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இது செல் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் வயதாகும் செயல்முறையை கணிசமாக குறைக்கிறது. மேலும் வழக்கமாக மஞ்சள் கலந்த பால் குடிப்பது தோலில் ஆழமான சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க உதவுகிறது.