முருங்கை தென்னிந்தியாவில் அதிகம் காணக்கூடிய மரமாகும். பெரும்பாலானோர் வீட்டிலேயே முருங்கை மரத்தை வளர்ப்பதுண்டு. ஆனால் சில பேர் மரத்தில் விளையும் முருங்கைக்காயை மட்டும் பறித்து சமைத்துவிட்டு முருங்கை இலையை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். சிலர் அரிதாக முருங்கை இலையை பறித்து கீரை பொரியலாக செய்து சாப்பிடுவர். ஆனால் உண்மையில் முருங்கை அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக ஒரு சூப்பர்ஃபுட் எனக் கருதப்படுகிறது. வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் முருங்கையில் ஏராளமாக காணப்படுகின்றன. முருங்கைப் பொடியை உணவில் சேர்ப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. எளிதான ஒரு வழிதான் முருங்கை நீர். முருங்கை நீரை எப்படி சட்டென செய்வது என்பதை பார்க்கலாம்.
முருங்கை நீர் செய்வது எப்படி? ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதனுடன் 1-2 டீஸ்பூன் முருங்கைப் பொடி சேர்க்கவும். ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து மிதமான சூட்டில் பருகவும்.காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்துவது நல்ல பலனைத் தரும். உணவுக்கு பின்னரும் செரிமானத்திற்காக முருங்கை நீரை எடுத்துக் கொள்ளலாம். தினமும் முருங்கை நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி காணலாம்.
எடை இழப்பு : சிந்தியா என்கிற உடற்பயிற்சியாளர் எழுதிய 'ஹவ் டு லூஸ் பேக் ஃபேட் (How To Lose Back Fat)' என்கிற புத்தகத்தின்படி, எடை இழப்பை ஊக்குவிக்க முருங்கை ஒரு நல்ல உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கை இலைகளில் கொழுப்பு குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதனால் முருங்கை நீரை பருகும் போது கொழுப்பை சேமிப்பதற்கு பதிலாக ஆற்றல் உற்பத்தியை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : முருங்கை இலையில் குர்செடின் (quercetin) மற்றும் குளோரோஜெனிக் அமிலம் (chlorogenic acid) போன்ற அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த கலவைகள் நச்சுகளை வெளியேற்றவும், இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாது பல பருவகால நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த காரணிகள் அனைத்தும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : டாக்டர் மனோஜ் கே அஹுஹாவின் கூற்றுப்படி, முருங்கைப் பொடியானது உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது, இதனால் இதயம் தொடர்பான அபாயங்களைக் குறைக்கிறது. தவிர, முருங்கையில் உள்ள ஜின்க்(Zinc), உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.