வீட்டிலேயே இறைச்சியை சமைத்து உட்கொள்ள விரும்புபவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கான பதிவுதான் இது. வீட்டிலேயே சுவையாக இறைச்சியை சமைக்க வேண்டும் எனில் கடையிலிருந்து இறைச்சி வாங்கும் போது மிகவும் கவனமுடன் தரமான சுவையுடைய இறைச்சியை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. இதனால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் அதே சமயத்தில் சுவை குறையாமலும் நம்மால் இறைச்சியை சமைக்க முடியும். அந்த வகையில் இறைச்சியை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஏழு விஷயங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இறைச்சி நிறத்தை கவனித்து வாங்க வேண்டும் : இறைச்சி வாங்கும் போது அதன் நிறத்தை வைத்து அதன் தரத்தை நம்மால் கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு மட்டனை பொருத்தவரை அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இறைச்சியை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. சிக்கனைப் பொறுத்தவரை லேசான பின்க் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ இருக்கும் இறைச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஒருவேளை இறைச்சி மிகவும் அடர் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அவை பழைய இறைச்சியாக இருக்கக்கூடும். அதுபோலவே இறைச்சி பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பது போல தோன்றினால் அவை பழைய இறைச்சியாகவோ அல்லது கெட்டுப் போன இறைச்சியாகவோ இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
இறைச்சி தொட்டு பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து வாங்க வேண்டும்: இறைச்சி வாங்கும் போது அதனை தொட்டு பார்த்து அதன் அமைப்பை பார்த்து வாங்குவது மிகவும் நல்லது. இறைச்சியின் மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும் பட்சத்தில் அதனை தாராளமாக வாங்கலாம். ஆனால் நீங்கள் கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அப்படியே அமுங்கிக் கிடந்தால் அதனை அப்படியே விட்டு விடுவது நல்லது.
மார்பலிங்கை பார்த்து வாங்க வேண்டும்: இறைச்சியின் மேல் பக்கத்தில் காணப்படும் கொழுப்புசத்துக்கள் நிறைந்த வெள்ளை நிற கோடுகள் போன்ற அமைப்பு மார்பலிங் எனப்படும். இறைச்சியானது இவ்வாறு வெள்ளை நிறக் கோடுகளுடன் இருக்கும் பட்சத்தில் அவை அதிக சுவையுடனும் ஜூஸியாகவும் இருக்கும். எனவே இப்படிப்பட்ட இறைச்சியை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறப்பானதாகும்.
உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு உள்ளதா என்பதை பரிசோதிக்கவும்: இறைச்சி மட்டுமின்றி அனைத்து வகை உணவுப் பொருட்களும் உணவு தர கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு உள்ளதா என்பதை பரிசோதித்து பார்ப்பது நல்லது. குறிப்பாக இந்தியாவில் பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்கும் போது அதில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் முத்திரை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது
சரியாக பேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்: இறைச்சியானது சரியாக பேக் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அதன் தரம் சரியாக இருக்கும். குறிப்பாக முழுவதும் காற்று நீக்கப்பட்டு வெற்றிடமாக்கபட்டு பேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் அப்போதுதான் இறைச்சியில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் வளராமல் புத்தம் புதியதாக இருக்கும். ஒருவேளை பேக்கிங்கில் ஏதேனும் சிறிய ஓட்டைகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் காற்று புகுந்து இறைச்சியின் தரம் கெட்டுப் போக வாய்ப்புகள் உண்டு.
எவ்வாறு தரமான இறைச்சியை தேர்ந்தெடுப்பது: எப்போதும் மிகவும் நம்பிக்கை உள்ள கசாப்பு கடைக்காரர் அல்லது கடையில் இருந்து மட்டுமே இறைச்சிகளை வாங்க வேண்டும். குறிப்பாக சுயமாக பண்ணை வைத்து, கால்நடைகளை வளர்த்து வருபவர்களிடம் இறைச்சியை வாங்குவது மிகவும் நல்லது. மேலும் குறிப்பிட்ட இறைச்சி கடையின் தரம் மற்றும் விமர்சனங்கள் ஆகியவற்றை இணையத்திலோ அல்லது மற்றவர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் தற்போதைய நாட்களில் அதிக அளவு இறைச்சியை உற்பத்தி செய்வதற்காக விலங்குகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன எனவே முடிந்தவரை இது போன்ற கடைகளில் இருந்து இறைச்சியை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.