நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் ரசாயனச் செயல்பாடுகளை வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். உடலின் செயல்பாட்டுக்கு மட்டுமல்ல, நாம் சிந்திக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது. தாவரம், விலங்கிலிருந்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலை சேமித்து, தேவைப்படும் போது வெளிப்படுத்த மெட்டபாலிசம் தேவை. நாம் 2 நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்தாலும் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலை உடல் தானாகவே எடுத்துக் கொள்ளும்.
மெட்டபாலிச செயல்முறையில் ஒரே நேரத்தில் அனபாலிசம் (Anabolism) மற்றும் கேட்டபாலிசம் (Catabolism) என இரண்டு வகையான சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. அவற்றில் அனபாலிசம் உடல்திசுக்களை கட்டமைத்து ஆற்றலைச் சேமிக்கும். கேட்டபாலிசம் கட்டமைத்த உடல்திசுக்களையும், சேமித்த ஆற்றலையும் உடைத்து உடல் செயல்பாடுகளுக்கு எரிபொருளாக மாற்றும்.
நாளமில்லா சுரப்பி அமைப்பில் இருக்கும் பல ஹார்மோன்கள் மெட்டபாலிச மாற்ற விகிதத்தையும், அது செயல்பட வேண்டிய திசையையும் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது தைராக்சின்(Thyroxine) ஹார்மோன். தைராய்டு சுரப்பி மூலமாக வெளிவரும் இந்த ஹார்மோன் ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தின் வேதியியல் எதிர்வினைகளை மெதுவாகவோ அல்லது விரைவாகவோ செயல்புரிவதை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மற்றொரு சுரப்பியான கணையமானது உடலில் ஆற்றலை சேமிக்க அல்லது உடைக்கும் நடவடிக்கையைத் தீர்மானிக்கிறது. மெட்டபாலிசத்தின் வீதம் வெவ்வேறு நபர்களில் வேறுபட்டு காணப்படும். வழக்கமான உடற்பயிற்சி, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற ஒருவரின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. குறிப்பாக வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துவதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் உடல் எடை குறைப்பில் மெட்டபாலிசத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.