தமிழர் பாரம்பரியத்தில் ‘தாம்பூலம்’ என்னும் சொல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. காதுகுத்து, திருமணம் என எந்தவொரு விசேஷங்களுக்கு நீங்கள் சென்றாலும் வரவேற்பு பகுதியில் அல்லது உணவு அரங்கிற்கு அருகில் மேஜை மீது வரிசையாக வெற்றிலை, பாக்கு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்க கூடும். சாப்பிட்டு முடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மெல்லுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
வீடுகளில் கூட, நம் தாத்தா, பாட்டி, சில சமயங்களில் நம் தாய், தந்தையரிடம் கூட உணவுக்குப் பிறகு வெற்றிலை மெல்லும் பழக்கம் இருக்கும். குறிப்பாக, விருந்து உணவு எடுத்துக் கொள்ளும் சமயங்களில், இதை அவர்கள் கட்டாயமாக கடைப்பிடிப்பார்கள். நம்மில் சிலரும் கூட வெற்றிலை, பாக்கு அல்லது ஸ்வீட் பீடா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம்.
புனிதம் மிகுந்த வெற்றிலை : வெற்றிலை சாப்பிடுவதற்கு மட்டுமானது மட்டுமல்ல. வீட்டின் பூஜை அறைகளில், கோவில்களில் தெய்வங்களை வழிபடும்போது வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது. விசேஷங்களில் உறவினர்களுக்கு தாம்பூல பை கொடுத்து அனுப்புவது வாடிக்கையாக இருக்கிறது. நம் வாழ்வில் இந்த அளவுக்கு இடம் பிடித்துள்ள வெற்றிலையில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.