காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் அதிவேகத்தில் காலை உணவு சமைப்பதற்கும் நேரமில்லை, சாப்பிடுவதற்கும் நேரமில்லை. இதில் பலருக்கும் இன்ஸ்டன்ட்டாக கைக் கொடுப்பது கார்ன்ஃபிளேக்ஸ். பெரிய பெரிய டப்பாக்களில் விதவிதமான ஃபிளேவர்களில் கிடைக்கும் கார்ன்ஃபிளேக்ஸில் கொஞ்சம் பால் மற்றும் விருப்பமான பழங்கள் அல்லது எசன்ஸை சேர்த்தால் உடனடியாக பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்நாக்ஸ் தயார். அலுவலகம் செல்வோர் மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் பல மாணவர்களும் காலையில் கார்ன்ஃபிளேக்சை உணவாக சாப்பிடுகிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் கார்ன்ஃபிளேக்ஸ் சாப்பிடுவது ஒரு ஃபேஷனாக கருதப்பட்டது. ஆனால் கார்ன்ஃபிளேக்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல, உடலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஹார்வர்டு டி எச் சான் பொது நலப் பள்ளியின் மருத்துவ ஆய்வாளரான ஃபிரான்க் ஹு என்பவர் கார்ன்ஃபிளேக்ஸ்ஸில் அதிக அளவு சர்க்கரையும் உப்பும் இருக்கிறது. அழற்சி மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் மிக அதிகம் உள்ளது மற்றும் கார்ன்ஃபிளேக்ஸ் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் உடல் பருமன் மற்றும் ஃபேட்டி லிவர்என்று கூறப்படும் கல்லீரலில் கொழுப்பு தங்கும் நோய் ஆகியவை ஏற்படும்.
கார்ன்ஃபிளேக்ஸ் ஏன் சாப்பிடக் கூடாது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். : பெரும்பாலானவர்கள் காலை உணவாக கார்ன்ஃபிளேக்ஸ் சாப்பிடும் பொழுது அதை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழை, மாதுளை, பாதாம், தேன் உள்ளிட்ட பலவற்றை சேர்க்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமாக எவ்வளவு பொருட்களை சேர்த்தாலும் கூட கார்ன்ஃபிளேக்ஸில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது. இது சோள மாவில் தயாராவது ஒரு பக்கம் இருந்தால், உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
வாழ்க்கைமுறை குறைபாடுகள் மற்றும் நோய்கள் ஏற்படும் : காலையில் சமைப்பதற்கு நேரமில்லை, உடனடியாக செய்யலாம், சுவையாகவும் இருக்கும் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் இல்லை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கார்ன்ஃபிளேக்ஸில் குறைவான அளவு நார்சத்து தான் இருக்கிறது. எனவே கார்ன்ஃபிளேக்ஸ் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுக்க துவங்கும். செரிமான ஆரோக்கியத்திற்கும், செரிமான உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் நார் சத்து தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கார்ன்ஃபிளேக்ஸ்ஸில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது. தொடர்ந்து அல்லது அடிக்கடி கார்ன்ஃபிளேக்ஸ் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகரித்து உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்க முடியாமல் போய்விடும். ஏற்கனவே இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு கார்ன்ஃபிளேக்ஸ் சாப்பிடுவது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் நோயை தீவிரப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் கார்ன்ஃபிளேக்ஸ் என்பது பாக்கெட்டில் வரும் உணவு, இதை பெரும்பாலும் பால் மற்றும் சர்க்கரை அல்லது இனிப்பு சேர்த்து தான் சாப்பிடுவார்கள். எனவே சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய ஆபத்தில் இருப்பவர்கள் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.