குளிர் காலத்தை வரவேற்க நாம் எல்லோரும் தயாராகி விட்டோம். அதே நேரத்தில், குளிர்காலத்தில் சுவையான இனிப்புகளை தயாரிப்பதற்காக பலவித யோசனைகளை வைத்திருப்பீர்கள். ஒரு கப் டீ/காபி, சூடான வடை, பஜ்ஜி அல்லது சூடான க்ரீம் சூப்பின் போன்றவற்றை தான் பெரும்பாலும் நாம் யோசிப்போம். ஆனால், இதையும் தாண்டி புதுமையான சில ஸ்நாக்ஸ் வகைகளை நீங்கள் செய்து அசத்த வேண்டும் என்றால், அதற்கான பதிவு தான் இது. இந்த குளிர்காலத்தில் நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில குளிர்கால இனிப்புகள் பற்றி இனி பார்க்கலாம்.
கஜர் கா ஹல்வா : இந்திய குடும்பத்தின் முக்கிய குளிர்கால இனிப்புகளில் பிரபலமானது இந்த கஜர் கா ஹல்வா ஆகும். இதற்கான செய்முறை முதலில் ஒரு கடாயை எடுத்து, சுமார் 500 மில்லி பாலை ஊற்றி, அதனுடன் துருவிய கேரட்டை சேர்க்கவும். இந்த கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பின் தீயை குறைத்து விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பிறகு இந்த கலவையில் நெய், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து கிளறி கொண்டே, குறைந்த தீயில் வேக வைக்கவும். பால் முழுவதுமாக காய்ந்ததும், நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ மற்றும் திராட்சையை சேர்த்து சூடாக மரிமாறலாம்.
பதிஷப்தா : குளிர்காலத்திற்கு ஏற்ற அற்புதமான பெங்காலி ரெசிபி பதிஷப்தா ஆகும். இது துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்பட்ட அப்பத்தை போன்ற ரெசிபி. இதற்கான செய்முறை ஒரு கடாயில், துருவிய தேங்காய், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும். பிறகு இவற்றுடன் சில ஏலக்காயை சேர்க்கவும். கலவை ஒட்டும் வரை கிளறிக்கொண்டே இருங்கள். நன்றாக கிளறியப்பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, அரிசி மாவு எடுத்து அதனுடன் பால் சேர்க்கவும். கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்கவும். 30 நிமிடங்கள் அதை அப்படியே விடுங்கள். பிறகு ஒரு நான்-ஸ்டிக் மீது, சிறிது எண்ணெய் தடவி கொள்ளவும். அந்த மைதா கலவையை எடுத்து, அப்பத்தை செய்வது போல் ஒரு மெல்லிய அடுக்கை ஊற்றவும். பின்னர் அதன் மையத்தில் பூரணத்தை சேர்த்து அதை உருட்டவும். இதை கடாயில் போட்டு பழுப்பு நிறமாக மாறியவுடன் அதிலிருந்து எடுக்கவும். நீங்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ இதை பரிமாறலாம்.
அடடியா பாக் : அடடியா பாக் என்பது குஜராத்திய உணவு வகைகளில் ஒன்று. இதை உளுத்தம்பருப்பில் தயார் செய்வார்கள் இதற்கான செய்முறை உளுத்தம் பருப்பை ஊறவைத்து, பின்னர் அதை அரைத்து பொடி செய்து கொள்ளவும். அல்லது கடையில் வாங்கிய உளுத்த மாவைப் பயன்படுத்தவும். ஒரு கடாயில், சிறிது நெய் சேர்த்து, உண்ணக்கூடிய பசையை (கோந்த்) வறுக்கவும். இது ஆறிய பிறகு நசுக்கி தனியாக வைக்கவும். அதே கடாயில் பாதாம், பிஸ்தா, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு பாலுடன் அதிக நெய் மற்றும் உளுத்தம்பருப்பு மாவை சேர்க்கவும். பால் வற்றும் வரை வறுக்கவும். பிறகு சிறிது தேங்காய்த் தூள் சேர்த்து வேக விடவும். இதில் அரைத்த கோந்த், ஏலக்காய் மற்றும் இஞ்சி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இதை பர்ஃபி வடிவத்தில் வெட்டி அனைவருக்கும் பரிமாறலாம்.
பஞ்சிரி : இது ஒரு பிரபலமான பஞ்சாபி ரெசிபி ஆகும், இது உங்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். இதை செய்வதற்கு ஒரு கடாயில், ஒரு கப் மாவு சேர்த்து வறுத்து கொள்ளவும். பின்னர் 4-5 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். முந்திரி மற்றும் வறுத்த பாதாமையும் இதில் சேர்த்து கொள்ளவும். மாவு சரியாக வெந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கவும். அடுத்து, சர்க்கரையை பகுதிகளாகச் சேர்த்து, அனைத்தும் சரியாக கலந்து கொள்ளும் வரை கலக்கவும். பிறகு சிறிது திராட்சையை சேர்த்து கொள்ளவும். சிறிது நேரத்திற்கு இதை ஆற விடவும். வெதுவெதுப்பான அல்லது ஒரு கப் சூடான பாலுடன் இந்த இனிப்பை பரிமாறவும்.
கஜக் : இந்த குளிர்கால இனிப்பு பட்டியலில் இது தான் கடைசியான ஸ்நாக். இந்த கஜக் இனிப்பை செய்வதற்கு, ஒரு கடாயில், சர்க்கரை மற்றும் நெய்யை சில துளிகள் தண்ணீரில் சேர்த்து, அது சிரப் ஆகும் வரை கிளறி விடவும். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது வறுத்த வேர்க்கடலையுடன் சேர்க்கவும். அடுத்து அதை நெய் தடவிய தட்டில் மாற்றி சமன் செய்து கொள்ளவும். இது சூடாக இருக்கும்போது வெட்டி கொள்ளவும். இந்த இனிப்பை ஆறிய பிறகு பரிமாறவும் மற்றும் காற்று புகாத டப்பாவில் வைத்து கொள்ளலாம்.