நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்றார் போல உணவு வகைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அவற்றின் அருமை தெரியாமல் இப்போது நாம் மாடர்ன் என்ற பெயரில் நம் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறோம். அதனால் எண்ணற்ற உபாதைகளுக்கு ஆளாகிறோம். ஆனால் சாப்பிடும் சில சாதாரண உணவு வகைகள் பல நம் இதயத்தை காப்பாற்றும் திறன் கொண்டவை. அவை என்னென்ன என்பதை அறிந்து அந்த உணவுகளை நாம் அடிக்கடி நாம் எடுத்துக் கொண்டால் நல்லது. நம் இதயத்திற்கு நன்மை செய்யும் அந்த உணவுகளில் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆரஞ்சு பழம் : இனிமேல் பழக்கடைக்கு போனால் ஆரஞ்சுப் பழத்தை உடனடியாக வாங்க மறந்துவிடாதீர்கள். ஆரஞ்சுப் பழத்தில் பல நன்மை செய்யும் சத்துப் பொருட்கள் இருக்கின்றன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி இருப்பதோடு நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு ஆரஞ்சுப் பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது.
வெள்ளைப் பூண்டு : அடுத்த நன்மை செய்யும் உணவுப்பொருளாக நாம் பார்ப்பது பூண்டு.மிகவும் மருததுவ குணம் நிறைந்த பூண்டு, நம் இந்திய உணவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. பூண்டில் இருக்கும் வேதிப் பொருட்கள் தாழ் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை போக்குவதில் பூண்டு மிகப்பெரிய பங்காற்றுகிறது. எனவே தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
சாக்லேட் : இனிப்பான சாக்லேட் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த சாக்லேட் நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. ஹார்வார்டு பல்கலைகழக அய்வு ஒன்று அண்மையில் கோகோவின் நன்மைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வெரும் கோகோவை சாப்பிட்டு வருபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைபர்டென்சன் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிறது அந்த அறிக்கை. சாதாரண இனிப்பு நிறைந்த சாக்லேட்டுகள் அல்லாமல், கோகோ செறிந்த கருப்பு சாக்லேட்டுகள் தான் இப்படி நன்மை தரக் கூடியவை.
மத்தி மீன் : பொதுவாகவே மீன்கள் நமக்கு அதிக சக்தியை தரும் உணவு என்றால் அது மீன் தான். அதிலும் நாம் மிக சாதாரணமாக நினைக்கும் மத்தி மீன் நம இதயத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடியவையாகும். மத்தி மீனில் இதயத்திற்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய ஒமேகா அமிலம் இருக்கிறது. இந்த அமிலம் நமக்கு பெரிய தீங்கை விளைவிக்கக் கூடிய டிரைகிளரிசைட் என்னும் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. அதோடு, நன்மை செய்யக் கூடிய HDL கொழுப்பை உண்டாக்கும் தன்மையுடையது.
மாதுளை : ஏகப்பட்ட ஆக்சினேற்றிகளை கொண்ட அருமையான பழம் தா் மாதுளம் பழம். சிவப்பு நிற முத்துகளை கொண்ட மாதுளம் பழங்கள் உண்மையிலேயே நமக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. மாதுளம் பழச்சாறு இதயத்தின் சுவர்கள் தடிக்காமல், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, அல்சைமர் எனப்படும் மறதி நோய், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதோடு நமது சருமம் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
மஞ்சள் : இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது மஞ்சள். மங்கலகரமான பொருளாகவும் மஞ்சள் மதிக்கப்படுகிறது. நோய்த் தொற்றை விரட்டும் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது மஞ்சள். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள் இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது. தொப்பை ஏற்படாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கிறது மஞ்சள்.