

பெரும்பாலான பகுதிகளில் தற்போது கோடைகாலம் ஆரம்பமாகிவிட்டது. பொதுவாக வெயில் காலத்தில் வியர்வை, சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் முகப்பரு, தடிப்புகள், எண்ணெய் சுரப்பு அதிகமாகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் வெப்பநிலையால் செபாசியஸ் சுரப்பிகள் (எண்ணெய் சுரப்பிகள்) செயல்பட தொடங்கி முகப்பரு, தடிப்புகள் மற்றும் பல தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


எனவே, உங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். சன்ஸ்கிரீன் லோஷன்கள், கற்றாழை ஜெல்கள் உள்ளிட்ட செயற்கை தயாரிப்புகள் தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். உங்கள் அன்றாட சாப்பாடு மற்றும் பானங்களில் கவனம் செலுத்துவது சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாகும்.


கோடைகாலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். பொலிவான சருமத்தைப் பெற நீங்கள் கோடை காலத்தில் அருந்த வேண்டிய பானங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,


லஸ்ஸி: லஸ்ஸி தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாகவே பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, கட்டிகள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.


மசாலா மோர் : வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க மசாலா மோர் ஒரு சிறந்த பானமாக இருக்கிறது. இதனை தயாரிக்க கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.


பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.<br />புதினா நீர் : வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல் அனைத்தும் மிகவும் வேகமாக குறையும். எனவே உடலின் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் ஓர் அற்புத பானம் உள்ளது. அதுதான் புதினா தண்ணீர். கோடையில் முகப்பரு தொல்லையால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மேலும் வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். ஆனால் இதனை புதினா நீர் குடிப்பதன் மூலம் சரிசெய்யலாம். மேலும் இந்த நீரைக் குடிப்பதால், சரும பொலிவும் மேம்படும்.


லெமன் ஜூஸ் : எடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து கொள்ளலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது. தினமும் கூட எலுமிச்சை சாறு அருந்தலாம்.


சர்பத் : கோடை வெப்பத்தையும், சிறுநீர்க்கடுப்பையும் போக்கும் நன்னாரி சர்பத் வீட்டிலேயே தயாரிக்கலாம். குறிப்பாக நன்னாரி சர்பத் சிறப்பானது. அதிக குளிர்ச்சித்தன்மை நிறைந்த இவற்றின் வேர் இனிப்பும், சிறு கசப்பும் கொண்டது. இவை உடலில் இருக்கும் வெப்பத்தை அகற்ற உதவும். மேலும் அனைத்து விதமான கோடை கால பிரச்னைகளையும் சரி செய்து, உடை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. நன்னாரி சர்பத்துடன், எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.